Last Updated : 20 Dec, 2020 06:11 PM

4  

Published : 20 Dec 2020 06:11 PM
Last Updated : 20 Dec 2020 06:11 PM

அரசுப் பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளத்தைத் தவிருங்கள்: புதுச்சேரி முதல்வருக்கு ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தல்

ரவிக்குமார்: கோப்புப்படம்

புதுச்சேரி

அரசுப் பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளத்தைத் தவிருங்கள் என்று, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி அரசு கல்வித்துறையின் சமீபத்திய இரண்டு அறிவிக்கைகளின் மூலம் புதுச்சேரியில் உள்ள சில அரசுப் பள்ளிகளின் பெயர்கள் மாற்றப்படுவதாக அறிவித்தது. அதில், சில அரசுப் பள்ளிகளின் பெயர்கள் சாதியப் பின்னொட்டுடன் இடம்பெற்றன.

புதுச்சேரி முழுவதும் முற்போக்காளர்கள், மாணவர் அமைப்புகள் மூலமாய் பெரிதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து அந்தப் பெயர் மாற்றங்களை உடனடியாகத் திரும்பப் பெற மனுவும் கொடுக்கப்பட்டது. மடுகரைப் பகுதியில் இப்பெயர் மாற்றங்களை எதிர்த்து சாலை மறியலும் நடத்தப்பட்டது. கல்வித்துறை நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து நடைமுறைக்கு வரவில்லை.

இதுகுறித்து, எம்.பி. ரவிக்குமார் இன்று (டிச.20) விடுத்துள்ள அறிக்கையில், "புதுச்சேரி மாநில அரசு 3 பள்ளிகளுக்கு மறைந்த அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூட்ட முடிவு செய்து அறிவித்துள்ளது. தலைவர்களைக் கவுரவிப்பது சரிதான். ஆனால், தலைவர்களின் பெயர்களோடு பின்னொட்டாக சாதிப் பெயர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பள்ளியில் பயிலும் மாணவப் பருவத்தில் சாதி என்னும் உணர்வை மனதில் ஏற்றுவது கேடாகவே முடியும். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இப்படிப் பெயர் சூட்ட ஆரம்பித்து அது மிகப்பெரிய சாதிக் கலவரத்துக்கு இட்டுச்சென்றதை புதுச்சேரி முதல்வர் நினைவுபடுத்திக்கொள்வது நல்லது" என்று தெரிவித்துள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி பிரதேச செயலர் ராமசாமி வெளியிட்ட அறிக்கையில், "புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாநிலக் கல்வித்துறையைச் சந்தித்து இப்பெயர் மாற்றங்கள் சமூகத்தில் அமைதியின்மையை, பதற்றத்தை, சாதிய துவேஷத்தைத் தூண்டுவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளது. இப்பெயர் மாற்றங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனக் கல்வித்துறையைச் சந்தித்து மனு தரப்பட்டது. புதுச்சேரி அரசு உடனடியாகப் பெயர் மாற்றங்கள் இல்லை என்று திருத்திய அறிவிக்கையை வெளியிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x