Last Updated : 20 Dec, 2020 05:29 PM

 

Published : 20 Dec 2020 05:29 PM
Last Updated : 20 Dec 2020 05:29 PM

டெல்லியில் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தமிழ்நாட்டில் போராட்டம் தொடரும்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

திருச்சி மிளகுபாறையில் அஞ்சலி செலுத்திய விவசாய சங்கத்தினர். | படம்: ஜி.ஞானவேல்முருகன்.

திருச்சி

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில், இதுவரை 30க்கும் அதிகமானோர் போராட்டக் களத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த விவசாயிகளுக்கு கிராமங்கள்தோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்த அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது. இதன்படி, மிளகுபாறையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மற்றும் குழுமணி சாலையில் உள்ள மேல பாண்டமங்கலம் அரவானூர் ஆகிய இடங்களில் இன்று (டிச.20) அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவசூரியன் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் த.இந்திரஜித் முன்னிலையில் மிளகுபாறையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் உருவப்படங்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றைச் சேர்ந்த நிர்வாகிகள் எஸ்.டி.சேசு அடைக்கலம், சோ.ரமேஷ், முரளி, செல்லதுரை, லாரன்ஸ், சதீஷ், செல்வராஜ் மற்றும் ஏஐடியுசி க.சுரேஷ், நடராஜன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயக்குமாரி, மாணவர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர்.தினேஷ், மாவட்டச் செயலாளர் க.இப்ராகிம் உட்பட பலா் கலந்து கொண்டனர்.

அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு இந்திரஜித் கூறியதாவது:

"டெல்லியில் கடும் குளிரிலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைக் கலைப்பதற்காக தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் குளிரில் நடுங்க வைத்தது உள்ளிட்ட அடக்குமுறைகளால் விவசாயிகள் 33 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் போராட்டத்தைக் கண்டு மனம் தாளாமல் சீக்கிய மதகுரு ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடன் தொல்லையால் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் ஏராளமானோரின் மனைவிகளும் போராட்டத்தல் பங்கேற்றுள்ளனர். தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் டெல்லிக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் முடிவுக்கு வரும் வரை தமிழ்நாட்டிலும் போராட்டம் தொடரும். தேவைப்பட்டால் டெல்லிக்கு நாங்களும் செல்வோம்".

இவ்வாறு இந்திரஜித் தெரிவித்தார்.

இதேபோல், மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ராஜா தலைமையில் அரவானூரில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், திமுக நிர்வாகி மதிவாணன், மகஇக கலைக் குழு பாடகர் கோவன், மாவட்டச் செயலாளர் ஜீவா, லதா, சரவணன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டு விவசாயிகளின் உருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x