Published : 20 Dec 2020 04:15 PM
Last Updated : 20 Dec 2020 04:15 PM
பாஜக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை என, அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை பாஜக மாநகர் மாவட்டப் பழங்குடியினர் அணியின் செயற்குழுக் கூட்டம் இன்று (டிச. 20) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:
"முதல்வர் வேட்பாளர் முடிவை தேசியத் தலைமைதான் அறிவிக்கும் என்று மாநிலத் தலைவர் முருகன் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கூட்டணியில் பாஜக மாநிலத் தலைமை எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. முக்கிய முடிவுகளை தேசியத் தலைமைதான் அறிவிக்க முடியும் என்பதைத்தான் முருகன் சொல்லி இருந்தார். அதிமுக நண்பர்கள் இதைப் புரிந்துகொண்டு பேச வேண்டும்.
தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வரும்போது அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். அமித் ஷா சென்னை வந்தபோது மேடையில் அதிமுக தலைவர்கள் கூட்டணி குறித்து அறிவித்தபோது, தான் கட்சித் தலைவர் கிடையாது என்பதால்தான் கூட்டணி குறித்து அவர் பேசவில்லை. கூட்டணி அமையும்போது பலமான கட்சிதான் தலைமை ஏற்கும். எது பலமான கட்சி என்பது உங்களுக்குத் தெரியும்".
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
இந்தக் கூட்டத்தில், "தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்று கிடைப்பது கடினமாக உள்ளது. எனவே, இதனை எளிமையாக்கி சாதிச் சான்று கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ஊராட்சிப் பகுதிகளில் இலவச வீடுகளை அதிக எண்ணிக்கையில் கட்டித் தர வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT