Published : 19 Dec 2020 10:29 PM
Last Updated : 19 Dec 2020 10:29 PM

அதிகாரிகள் வீட்டுக்குப் போகும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் அமைச்சர்கள் வீட்டுக்கு போக மாட்டார்களா?- ஸ்டாலின் கேள்வி

சென்னை

"லஞ்ச ஒழிப்பு ரெய்டு, ஒரு சில அதிகாரிகள், அலுவலர்களைக் கைது செய்வதன் மூலமாக நாங்கள் தூய்மையான நிர்வாகத்தைத் தருகிறோம் என்று காட்ட நினைக்கிறார். அதிகாரிகள், அலுவலர்கள் மீதான ஊழல்களை மட்டும் தான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பிடிக்குமா? ரெய்டு நடத்துமா? அமைச்சர்கள் வீட்டுக்குள் இந்த லஞ்ச ஒழிப்புத் துறை போகாதா?" என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டமன்றத் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் காணொலி வாயிலாக ஸ்டாலின் பேசியதாவது.

“சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'நான் வீடியோ கான்பரன்சில் கட்சிக்காரர்களிடம் பேசிக் கொண்டு இருப்பதாகவும், அவர் மக்களைச் சந்திப்பதாகவும் சொல்லி இருக்கிறார். கரோனா காலம் என்பதால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு இந்தத் தமிழக அரசுதான் தடை விதித்துள்ளது.

தடைவிதித்த முதல்வரே, என்னை ஏன் மக்களைச் சந்திக்கவில்லை என்று கேட்பதைப் பார்க்கும் போது அவர் நிதானத்தில்தான் பேசுகிறாரா என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஒரு மாவட்டத்தில் கூட்டம் நடத்துவதாக இருந்தால் ஒரு லட்சம் பேர், ஒன்றரை லட்சம் பேர் கூடுவார்கள். அத்தகைய கூட்டத்தை நடத்த முடியாது என்பதால் காணொலிக் காட்சி மூலமாக நடத்தி வருகிறோம்.

திறந்த வெளியில் அரசியல், கலாச்சார, மதக் கூட்டங்களை நடத்துவதற்கு இன்று முதல் தான் அனுமதி என்று அறிவித்ததும் இதே பழனிசாமிதான். ஏன் ஸ்டாலின் பொதுக்கூட்டம் பேச வரவில்லை என்று கேட்பதும் அதே பழனிசாமி தான். அது வேற வாய். இது வேற வாயா?

ஊரடங்கைத் தளர்த்தினால் திமுகவினர் கூட்டம் போட்டுவிடுவார்கள் என்பதற்காகவே ஊரடங்கை நீடித்துக் கொண்டே இருந்தார் பழனிசாமி என்பது எங்களுக்குத் தெரியாதது அல்ல. நேற்றைய தினம் விவசாயிகளுக்காக மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்தைச் சென்னையில் நடத்தினோம். அதனுடைய எழுச்சியை, உணர்ச்சியை இந்த அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அனுமதி தரவில்லை. விவசாய முதல்வர் ஆட்சியில், விவசாயிகளுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு தடை விதித்தார்கள். தடையை மீறி நடத்தினோம். உடனே வழக்கு போட்டுவிட்டார்கள். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு போட்டுள்ளார்கள். என்ன பொது அமைதி கெடுகிறது?

வழக்கமாகக் கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த அனுமதிக்கும் இடத்தில் தான் நடத்தினோம். இதனால் பொது அமைதி எங்கே கெட்டது? எதற்காக அனுமதி தர மறுக்கிறீர்கள்? அனுமதி மறுப்பதும் அவர்கள் தான், ஏன் ஸ்டாலின் வெளியில் வரவில்லை என்று சொல்வதும் அவர்கள் தான்.

19-ம் தேதியில் இருந்து கூட்டம் நடத்தலாம் என்று அறிவித்துவிட்டு-19 ஆம் தேதி அன்று நான் பிரச்சாரம் தொடங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்ததைப் போல சுயநலம் இருக்க முடியுமா? சட்டத்தை உங்கள் விருப்பத்துக்கு தகுந்த மாதிரி வளைப்பீர்களா? நீங்கள் பிரச்சாரம் தொடங்கும் நாள் வரைக்கும், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே வந்தது ஜனநாயக விரோதம் அல்லவா?

பழனிசாமி என்ற தனிமனிதருக்காக இத்தனை நாட்களாக மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் எத்தனை? எத்தனை விழாக்கள், நிகழ்ச்சிகள் இதனால் கொண்டாட முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்? அவர்களுக்கு எல்லாம் பழனிசாமி என்ன பதில் சொல்கிறார்? இப்படி தனது சுயநலத்துக்காக மட்டுமே, அனைத்தையும் செய்யும் பழனிசாமி, திமுகவை சுயநலக் கட்சி என்று சேலத்தில் பேசி இருக்கிறார்.

இப்படிப் பேசினாரே? அது அதிமுக கூட்டமா? இல்லை. அரசு நிகழ்ச்சி. அரசு நிகழ்ச்சி என்ற பெயரால் கரோனா காலத்தில் அதிமுக கூட்டத்தை அவர் தான் நடத்தி வந்தார். தினமும் அரசு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து எதற்காக அரசியல் பேச வேண்டும்? இது முதல்வருக்கு அழகா? இந்த நாட்டில் சுயநலத்தின் மொத்த உருவமே பழனிசாமிதான். அது அதிமுகவினருக்கே தெரியும்.

முதல்வர் பதவியை அடைவதற்காக சசிகலாவின் காலை நோக்கி பழனிசாமி ஊர்ந்து போகக் காரணம் என்ன? சுயநலமா? பொதுநலமா? தனக்கு பதவி கொடுத்த சசிகலாவின் காலை வாரி விட்டது பழனிசாமியின் சுயநலமா? பொதுநலமா? தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மத்திய பாஜக அரசின் காலில் பழனிசாமி மண்டியிட்டுக் கிடப்பதற்குக் காரணம் சுயநலமா? பொதுநலமா?

தனது நாற்காலி நிலைத்தால் போதும் என்பதற்காக தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் தாரை வார்த்த பழனிசாமியின் செயல்பாடு சுயநலமா? பொதுநலமா? பாஜகவின் தயவுக்காக, விவசாயிகளுக்கு துரோகமான மூன்று சட்டங்களை நித்தமும் ஆதரித்து பேசி வரக் காரணம் பழனிசாமியின் சுயநலமா? பொதுநலமா? பொதுநலனைப் பற்றி பழனிசாமி பேசலாமா?

அவரது அரசியல் குணம் இரண்டு தான். ஒன்று சுயநலம் இன்னொன்று நம்பிக்கைத் துரோகம். சுயநலத்தால் அரசியலுக்குள் நுழைந்து- நம்பிக்கைத் துரோகத்தால் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள பழனிசாமிக்கு திமுகவைப் பற்றியோ என்னைப் பற்றியோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. தியாகத்தால் தழும்பேறி- உழைப்பால் முன்னேறி கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற என்னை விமர்சிப்பதற்கான தார்மீக அருகதை பழனிசாமிக்கு இல்லை என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன்.

கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறது. திடீர் திடீரென்று ரெய்டு போகிறார்கள். பணங்களைப் பறிமுதல் செய்கிறார்கள். தங்கம் எடுக்கிறார்கள். நகைகளைப் பறிமுதல் செய்கிறார்கள். 'தமிழகத்தில் லஞ்சத்தை ஒழிக்கப் போராடும் போலீஸ் படை' என்று பத்திரிகைகள் பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன.

ஆர்.டி,ஓ. அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள், மின்சார வாரிய அலுவலகங்கள் என மக்களோடு நேரடித் தொடர்பு உள்ள அலுவலகங்களில் தமிழக லஞ்சஒழிப்புப் படையினர் குறிவைத்துச் செயல்பட்டு ஊழல் அதிகாரிகளைக் கைது செய்து வருகிறார்கள்.

கடந்த 17 ஆம் தேதி வரைக்கும் அரசு அதிகாரிகள் 33 பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளார்கள். கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்த லஞ்சஒழிப்புத் துறை என்ன செய்தது?லஞ்சத்தை ஒழித்ததா? இல்லை. ஆட்சி முடியப் போகின்ற நேரத்தில், நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று காட்டுவதற்கு அதிமுக அரசு திட்டமிட்டு நடத்தும் நாடகங்கள் தான் இவை.

'தமிழக அரசு நிர்வாகத்தை சுத்தமாக வைக்கவே இதனைச் செய்கிறது' என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். ஒரு சில அதிகாரிகள், அலுவலர்களைக் கைது செய்வதன் மூலமாக நாங்கள் தூய்மையான நிர்வாகத்தைத் தருகிறோம் என்று காட்ட நினைக்கிறார். அதிகாரிகள், அலுவலர்கள் மீதான ஊழல்களை மட்டும் தான் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை பிடிக்குமா? ரெய்டு நடத்துமா? அமைச்சர்கள் வீட்டுக்குள் இந்த லஞ்ச ஒழிப்புத் துறை போகாதா? இதுதான் நான் எழுப்பும் கேள்வி.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றவர்களும் அளித்த புகார்கள் மீது இந்த லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்த நடவடிக்கை என்ன?நடத்திய விசாரணை என்ன? தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் 2018-ம் அக்டோபர் மாதம் புகார் சொன்னோம்.

காற்றாலை மின் உற்பத்தியிலும், நிலக்கரி வாங்கிய விவகாரத்திலும் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டினோம். இது வரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? எதுவும் இல்லை.

*தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நீதிமன்றம் போனோம். அந்த வழக்கு தான் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கு உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தடை வாங்கி உள்ளார்.

* ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக வருமான வரி சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்தோம். இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? எதுவும் இல்லை.

*துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகாரை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளித்தோம். என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? எதுவும் இல்லை. நீதிமன்றம் சென்றோம். முறையாக விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* லஞ்சம் பெற்றுக் கொண்டு தரமற்ற கல்லூரிகளின் விவரங்களை வெளியிட அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மறுப்பதாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையிடம் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புகார் சொன்னோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூரப்பாவின் ஆட்டம் அதிகமான பிறகு இன்று வேறு வழியில்லாமல் விசாரணைக் கமிஷனை கடந்த மாதம் போட்டுள்ளது தமிழக அரசு.

*2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை தமிழக காவல்துறைக்கு சிசிடிவி, லேப்-டாப், வாக்கி-டாக்கி போன்ற உபகரணங்கள் வாங்கிய விவகாரத்தில் 350 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை.

* கோவை மற்றும் சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணி மீது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் தரப்பட்டது. நடவடிக்கை இல்லை.

* அமைச்சர் வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் செய்தது. இதுவரை நடவடிக்கை இல்லை.

* அமைச்சர் வேலுமணி மீது சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் ஊழல் தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் 2018 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் தரப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை.

* துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு புகாரை 2017 ஆம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்தது. இதுவரை நடவடிக்கை இல்லை.

* அரசுக்கு சொந்தமான இடத்தை அமைச்சர் வேலுமணி அறக்கட்டளையின் அம்மா ஐஏஎஸ் அகாடமி என்று மாற்றியது தொடர்பாக அறப்போர் இயக்கம் 2019 புகார் அளித்தது. இதுவரை நடவடிக்கை இல்லை.

இதுதான் தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத் துறை இயங்கும் லட்சணம். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீதான வழக்கை விசாரிக்க மறுத்தால் லஞ்ச ஒழிப்புத் துறையை எதற்காக வைத்திருக்க வேண்டும்? அதிகாரிகளை, அலுவலர்களை மட்டும் தான் கைது செய்வீர்களா? இது என்ன சட்டம்? என்ன நியாயம்? தேர்தல் வருகிறது என்பதற்காக நடிக்கிறீர்களா?”.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x