Published : 19 Dec 2020 05:55 PM
Last Updated : 19 Dec 2020 05:55 PM
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் அவனியாபுரத்தில் ஜல்லிகட்டு காளைகளை அதன் உரிமையாளர்கள் போட்டிக்கு மும்முரமாக தயார் செய்து வருகின்றனர்.
அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போட்டி விழாக்குழு நிர்வாகிகள் தமிழக அரசிடம் வழக்கம்போல் தடையில்லாமல் போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி கேட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை அன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கும். மறுநாள் பாலமேடு, அதற்கு அடுத்த மறுநாளில் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடக்கும்.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைக்கட்டும். கரோனா தொற்று நோய் பரவாலால் தற்போது வரை ஜல்லிக்கட்டுப்போட்டிகள் வழக்கம் போல் நடப்பதற்கான அறிவிப்புகளும், ஏற்பாடுகளும் அரசுத் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.
அதனால், மதுரை மாவட்ட நிர்வாகமும், போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தொடங்கவில்லை. ஆனால், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்நல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளனர். போட்டிகளுக்கான பரிசுகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஸ்பான்சர் பெற்று வீரர்களுக்கும், காளைகளுக்கும் வழங்குவார்கள். அதற்கு தற்போதே ஏற்பாடுகளை தொடங்கினால் மட்டுமே வழக்கம்போல் ஜல்லிக்கட்டு போட்டிகளை விமரிசையாகக் கொண்டாடப்படும்.
தற்போது கரோனா கட்டுக்குள் வந்ததால் ஜல்லிக்கட்டுபோட்டி போன்ற கலாச்சார விழாக்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் அவனியாபுரத்தில் போட்டிகளுக்கு காளைகளை அதன் உரிமயைாளர்கள் வழக்கம்போல் தயார் செய்து வருகின்றனர். வீரர்களும் காளைகளை அடக்குவதற்கான பயிற்சிகளை தொடங்கியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு காளைகளை தற்போது தண்ணீர் ஓடும் வைகை ஆற்றுக்குள் அழைத்து சென்றும், ஆங்காங்கே நிரம்பி காணப்படும் கண்மாய்களுக்கு அழைத்துச் சென்றும் நீச்சல் பயிற்சி வழங்குகின்றனர்.
அதுபோல், நடைப்பயிற்சி, மரங்களில் கட்டிவிட்டு அவற்றை சீண்டி விட்டு பாய விடுவது, மணலில் கொம்புகளைக் கொண்டு குத்தவிடுவது போன்ற பயிற்சிகளை காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் வழங்குகின்றனர். அதுபோல், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிகளுக்கு தயார் செய்யப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு தலைவர் ஜே.சுந்தர்ராஜன் கூறுகையில், ‘‘வழக்கம்போல் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தடையில்லாமல் நடக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அவனியாபுரத்தில் 14ம் தேத பொங்கல் நாளில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்கு அடுத்து பாலமேடு, 16-ம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கும்.
இதற்கு அரசு அனுமதி அளிக்க முதலமைச்சரிடமும், உள்ளூர் அமைச்சர்களிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முறைப்படி வாடிப்பட்டி தாலுகா வட்டாட்சியரிடமும் மனு அளித்து அரசு விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்துவதற்கு உறுதி அளித்து அனுமதி வழங்க மனு அளித்துள்ளோம்.
28, 29-ம் தேதிகளில் அரசு தரப்பில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT