Published : 19 Dec 2020 02:31 PM
Last Updated : 19 Dec 2020 02:31 PM
அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆர்டிஓ, அலுவலக ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட எட்டுப் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கீழப்பழுவூரில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று (டிச.18) மாலை 5.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் இருந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், அலுவலக ஊழியர்கள், இடைத்தரகர்கள் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், அலுவலக ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்கள் 5 பேர் உள்ளிட்ட எட்டுப் பேர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்த சோதனை மற்றும் விசாரணை இன்று (டிச.19) விடியற்காலை மூன்று மணிக்கு நிறைவு பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT