Published : 19 Dec 2020 09:49 AM
Last Updated : 19 Dec 2020 09:49 AM
கோவில்பட்டியில் ரயில்களை நிறுத்த வேண்டும் எனவும், கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (டிச. 19) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா ஊரடங்குக்குப் பின்னர், ரயில்வே துறையினர், பாதிக்கும் குறைந்த அளவிலேயே ரயில்களை இயக்கி வருகின்றனர். அப்படி ஓடுகின்ற ரயில்கள், முன்பு வழக்கமாக நிற்கின்ற பெரிய ரயில் நிலையங்களில் கூட இப்போது நிற்காமல் ஓடுகின்றன. இதனால், தமிழகம் முழுமையும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான தீப்பெட்டி ஆலைகள், கடலை மிட்டாய், பட்டாசு, விவசாயம், நூற்பாலைத் தொழில்கள் நிறைந்த பகுதி கோவில்பட்டி ஆகும். இவை தவிர, மத்திய மாநில அரசு அலுவலகங்கள், தனியார், அரசு கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளும் நிறைய உள்ளன. கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள், இந்தியப் படையில் பணிபுரிகின்றார்கள். இவர்களும், மருத்துவத்திற்காக மதுரை, சென்னை, திருவனந்தபுரத்திற்குச் செல்கின்றவர்களும், போக்குவரத்திற்கு ரயில்களையே பெரிதும் சார்ந்திருக்கின்றார்கள். தென் மாவட்டங்களில் ஒரு பெரிய இணைப்பு மையமாக கோவில்பட்டி திகழ்கின்றது.
எனவே, கோவில்பட்டி வழியாக நாள்தோறும் 27 பயணிகள் ரயில்கள் இரு வழிகளிலும் ஓடிக் கொண்டு இருந்தன. முன்பதிவின் மூலமாக, நாள்தோறும் ரூபாய் 4 லட்சம் என ஆண்டுக்கு ரூபாய் பத்துக் கோடி, மதுரைக் கோட்டத்திற்கு வருவாய் பெற்றுத் தருவதால், கோவில்பட்டி நிலையம், 'ஏ' கிரேடு தகுதி பெற்று இருக்கின்றது.
ஆனால், இப்போது பாதித் தொடரிகள்தான் ஓடுகின்றன. அதிலும், நாகர்கோவில்-சென்னை விரைவுத் ரயில் எண் 06064, மதுரையில் இருந்து நாள்தோறும் இரவு 11 மணிக்குப் புறப்படும் புனலூர் விரைவு ரயில் எண் 06731, 06730, நாகர்கோவில்-கோவை விரைவு ரயில் எண் 02667, சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரும் அதிவிரைவு ரயில் எண் 02633 ஆகியவை, கோவில்பட்டி நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.
மேலும், வாரந்தோறும் புதன், வெள்ளி ஆகிய நாள்களில் மட்டுமே ஓடுகின்ற, கன்னியாகுமரி- டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில் எண் 06012, வெள்ளிக்கிழமை மட்டும் ஓடுகின்ற நாகர்கோவில்-சென்னை வண்டி எண் 06064 ஆகிய ரயில்களும் கோவில்பட்டி நிலையத்தில் நிற்பது இல்லை.
இதனால், ஏழை, எளிய, நடுத்தரப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர். எனவே, மேற்கண்ட ரயில்கள் அனைத்தும், முன்பு போலவே கோவில்பட்டி நிலையத்தில் நின்று செல்ல, தெற்கு ரயில்வே உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மேலும், தற்போது விரைவு ரயில்களை மட்டுமே இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். பயணிகள் வண்டிகளை ஓட்டுவது குறித்து, எந்த அறிவிப்பும் இல்லை. ஆனால், தமிழகம் முழுமையும் லட்சக்கணக்கான மக்கள், அன்றாடம் பயணிகள் ரயில்களைத்தான், தங்களுடைய தொழில், வேலைவாய்ப்புக்கு நம்பி இருக்கின்றனர். எனவே, பயணிகள் ரயில்களையும் இயக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
பொதிகை, நெல்லை, கன்னியாகுமரி என்ற பழந்தமிழ்ப் பெயர்களில் ஓடிக்கொண்டு இருந்த அத்தனை ரயில்களின் பெயர்களையும் மறைத்து, சிறப்பு ரயில்கள் என ஒரே பெயரில் இயக்குகின்றார்கள்.
இப்படிப் பெயர்களை மாற்ற வேண்டிய தேவை என்ன? யாருடைய அழுத்தத்தின் பெயரில் மாற்றினார்கள்? இது தேவை அற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். தமிழக மக்களின் உணர்வுகளோடு தெற்கு ரயில்வே விளையாடக் கூடாது; வழக்கமான பெயர்களிலேயே ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்".
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT