Last Updated : 20 Oct, 2015 02:35 PM

 

Published : 20 Oct 2015 02:35 PM
Last Updated : 20 Oct 2015 02:35 PM

கேரள உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய தமிழக தொழிலாளர்கள்: அரசியல் கட்சியினர் அதிர்ச்சி

கேரள உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட தமிழக தோட்டத் தொழிலாளர்கள் அதிக அளவில் களம் இறங்கி உள்ளதால், அம்மாநில அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள உள்ளாட்சித் தேர்தல் வருகிற நவ. 2, 5-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இடுக்கி மாவட்டத்தில் நவ. 2-ல் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு தொடுபுழா நகராட்சியில் 35 வார்டுகள், கட்டப்பனை நகராட்சியில் 34 வார்டுகள் என 69 வார்டுகள் மற்றும் மூணாறு, தேவிகுளம், சின்னகானல், சாந்தம்பாறை உள்ளிட்ட 52 ஊராட்சிகளில் 792 வார்டுகளுக்கு 1,453 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இடுக்கி மாவட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி தேயிலை, ஏலம், காபி தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இவர்கள் கேரள அரசிடம் இருந்து குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர்.

மூணாறில் சில நாட்களுக்கு முன்பு போனஸ் மற்றும் கூலி உயர்வுப் பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. அப்போது 9.8 சதவீதம் போனஸ் பெற்றுக் கொடுத்து, தங்களை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏமாற்ற முயற்சிப்பதாகக் கூறி, அவர்களை போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என தொழிலாளர்கள் தடுத்தனர். பெண் தொழிலாளர்கள் மட்டுமே போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.

இந்நிலையில், தற்போது இடுக்கியில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தமிழக, கேரள தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களமிறங்கி உள்ளனர். சிவன்மலை எஸ்டேட் ஒற்றப்பாறை டிவிஷனில் வசிக்கும் முனியம்மாள் என்ற தொழிலாளி மூணாறு ஊராட்சிமன்ற 14-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக நிற்கிறார். தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு தலைமை வகித்த தேவிகுளம் எஸ்டேட் பேக்டரி டிவிஷனில் வசிக்கும் கோமதி என்பவர் தேவிகுளம் ஊராட்சி ஒன்றியம், நல்லதண்ணி வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதேபோல, பல தொழிலாளர்கள் போட்டியிட களமிறங்கி உள்ளதால் அம்மாநில அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின்போது தொழிற்சங்க நிர்வாகிகள் கைகாட்டும் வேட்பாளர்களுக்கே தொழிலாளர்கள் இதுவரை வாக்களித்து வந்தனர். ஆனால், தற்போது தொழிலாளர்களே பொதுமக்கள் பிரச்சினைக்காக போராட முன் வந்து தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

கூலி உயர்வு போராட்டத்தின்போது வர்த்தகர்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடைகளை அடைத்து, வாகனங்களை நிறுத்தி எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் உம்மன்சாண்டி தலைமையிலான அரசு இடுக்கி மாவட்டத்தை முதல்தர சுற்றுச்சூழல் பகுதியாக அறிவிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இடுக்கி மாவட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதால், அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர். தொழிலாளர்கள் அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x