Published : 18 Dec 2020 05:47 PM
Last Updated : 18 Dec 2020 05:47 PM
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் இருந்து நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று (டிச. 18) ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் அதிமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
வரும் 2021-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது, அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கட்சியினர் கொண்டு சென்று சேர்ப்பது, மாவட்டம் முழுவதும் பூத் கமிட்டி அமைத்து, அயராது தேர்தல் பணியாற்றிட தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர் பழனிசாமி, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
கட்சி ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
"வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், சொந்த தொகுதிக்கு அடிக்கடி வர முடியாத நிலை ஏற்படும்.
எனவே, நாளை (டிச. 19) எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நாளை காலை பெரியசோரகையில் உள்ள சென்றாயபெருமாள் கோயிலில் ஆண்டவனை பிரார்த்தனை செய்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்.
எடப்பாடி, நங்கவள்ளி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மினி கிளினிக் தொடக்க விழாவில் பங்கேற்கிறேன். தொடர்ந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, எனது சொந்தத் தொகுதியில் இருந்து கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், "கடந்த நாடளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளுடனான கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் தொடர்வதை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவே கூறிச் சென்றுள்ளார். புதியதாக வந்துள்ள பாஜக மாநிலத் தலைவரின் கருத்து ஏற்புடையதல்ல.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மாநில அரசு தேவையான அனைத்து நிலத்தையும் மத்திய அரசுக்கு ஒப்படைத்துள்ளது. மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலத்தை, மாநில அரசிடம் இருந்து இன்னும் வந்து வாங்காமல் இருக்கின்றனர்.
கரோனா தொற்று காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை நிலத்தை சம்பந்தப்பட்ட மத்திய அரசு அதிகாரிகள் வந்து பெற்று கொள்ளவில்லை. இப்போது, நிலைமை சரியாகி விட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலத்தை மாநில அரசு, மத்திய அரசிடம் ஒப்படைத்துவிடும்.
லாரிகளில் பொருத்தக்கூடிய ஜிபிஎஸ் கருவி, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்று யாரையும் நிர்பந்திக்கவில்லை. இது மத்திய அரசின் திட்டம். மத்திய அரசு லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இதுசம்பந்தமாக போக்குவரத்துத் துறை மூலம் சுற்றறிக்கை மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் தேவையான விளக்கத்தை அளித்துள்ளார். தரமான நிறுவனங்களிடம் இருந்து தான் ஜிபிஎஸ் உபகரணங்கள் வாங்க வேண்டும் என்பதே நோக்கம்.
தவிர்த்து, குறிப்பிட்ட நிறுவனங்களிடம் கருவிகளை வாங்க வேண்டும் என்று யாரையும் நிர்பந்திக்கவில்லை. தற்போது, அதுசம்பந்தமான நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து விட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் கண்டுள்ளதால் மக்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, விலை குறைக்க வேண்டி மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது".
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT