Published : 18 Dec 2020 05:38 PM
Last Updated : 18 Dec 2020 05:38 PM
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (டிச. 18) தஞ்சாவூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம், மாநில செயலாளர் சாமி.நடராஜன் ஆகியோர் பேசினர்.
இதில் மக்கள் அதிகாரம் அமைப்பு பொருளாளர் காளியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர் செந்தில்குமார், சமவெளி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பழனிராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில செயலாளர் சாமி.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்ட மசோதாவையும் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வரும் டிச. 20 கிராமங்கள் தோறும் நடக்கிறது. இறந்த விவசாயிகளின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துகிறோம்.
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட வேளாண் சட்டங்களை பகிரங்கமாக ஆதரித்து பேசாத நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி ஆதரித்து பேசுவதுடன், இந்த சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என கூறி வருகிறார். ஏற்கெனவே தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு பல துரோகங்களை செய்து வருகிறது.
அதன்தொடர்ச்சியாக, வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என கூறுவது விவசாயிகளை குழப்பக்கூடிய செயலாகும். இது வடிகட்டின பொய்யாகும். தவறாக பிரசாரம் செய்யும் முதல்வர் விவசாயிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த சட்டங்களால் நெல் கொள்முதல் நிறுத்தப்படும். பொது விநியோகத் திட்டம் ரத்தாகும். மின்சார சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தமிழகம் தான் நேரடியாக பாதிக்கப்படும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்தாகும். எனவே, வேளாண் சட்டங்கள், மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், இந்த திட்டங்களுக்கு மாநிலஅரசு அளிக்கும் ஆதரவை திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 29-ம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இதில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் உள்ள 55 அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் தமிழகம் முழுவதும் இருந்து பங்கேற்க உள்ளனர்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT