Published : 18 Dec 2020 02:24 PM
Last Updated : 18 Dec 2020 02:24 PM

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு மக்கள்தான் வாரிசு: முதல்வர் பழனிசாமி பேச்சு

அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி.

சேலம்

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு மக்கள்தான் வாரிசு என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச. 18), சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரம், ஏ. வாணியம்பாடியில் முதல்வரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது:

"ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகிய இருபெரும் தலைவர்களுக்கும் வாரிசுகள் கிடையாது. நாம் தான் வாரிசு, மக்கள் தான் வாரிசு. அவ்வாறு எண்ணித்தான் நல்ல பல திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்குத் தந்தார்கள். வேறு எந்தத் தலைவர்கள் வந்தாலும் அந்தத் திட்டங்களை நிறுத்த முடியாது.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றார். அவர் வீடியோ கான்ஃபரன்ஸில் கட்சியினரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் நேரடியாக மக்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

கரோனா தொற்று காலத்திலும், தமிழ்நாடு முழுவதும் ஒரு மாவட்டத்தைத் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் நேரடியாகச் சென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வு செய்த ஒரே முதல்வர் தமிழ்நாட்டில் அதிமுக முதல்வர், மறுக்க முடியுமா? நீங்கள் வீட்டிலே அமர்ந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அரசை விமர்சிக்கின்றீர்கள், அமைச்சர்களை விமர்சிக்கின்றீர்கள், கட்சியை விமர்சிக்கின்றீர்கள். மக்களை சந்திப்பது பெரிதா? வீட்டிலே இருந்து பேசுவது பெரிதா? என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

நாங்கள் மக்களுக்காக கடுமையாக உழைக்கின்றோம். நேரடியாக மக்களை சந்திக்கின்றபோதுதான் அங்கே என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை உணர முடியும். அப்படி உணர்ந்தால்தான் அதை நிறைவேற்ற முடியும். அதை எங்களுடைய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

நான் மட்டுமல்ல, மேடையில் அமர்ந்திருக்கின்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற அமைச்சர்கள், அதிமுகவின் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சித் துறையின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கூட்டுறவு சங்கத்தின் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம், இரவு, பகல் பாராமல் உழைக்கின்றோம். இருபெரும் தலைவர்கள் வழியிலே உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே, ஒவ்வொரு துறையிலும் என்னென்ன நன்மைகள் மக்களுக்கு கிடைக்குமோ அவை கிடைக்க வேண்டுமென்பதற்காக நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.

திமுக அப்படியா இருக்கின்றது? சுயநலவாதிகள். தங்கள் குடும்பம்தான் வாழ வேண்டுமென்று எண்ணுகின்ற ஒரே கட்சி திமுக தான். அந்தக் கட்சியில் தலைவரிலிருந்து தொண்டர்கள் வரைக்கும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆனால் அதிமுகவில் அப்படியல்ல, உழைக்கின்றவர்கள் பதவிக்கு வர முடியும். விசுவாசமாக இருக்கின்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வர முடியும். ஏனென்று சொன்னால், உழைக்கின்றவர்களைத்தான் மக்கள் மதிப்பார்கள். அதை மதிக்கக்கூடிய கட்சி அதிமுக, அதிமுக அரசு.

ஆகவே தான், இந்த இயக்கத்தை உடைக்க முயற்சித்தார்கள், இந்த அரசைக் கலைக்க முயற்சித்தார்கள், மக்களுடைய துணை கொண்டு இரண்டும் முறியடிக்கப்பட்டது. ஆகவே, அதிமுக அரசு என்றைக்கும் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கிராமப்புற மக்களுடைய வாழ்வு உயர எங்களுடைய அரசு அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடும்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x