

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கூடுதலாக மழை பொழிவை தந்துள்ளது. இயல்பான அளவைவிட 9 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள செய்தி அறிக்கை:
“குமரி கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.
கடலோர மாவட்டங்கள், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
அடுத்த 48 மணி நேரத்தில் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தெற்கு உள் மாவட்டங்களில் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.
அதனைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் .
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:
புவனகிரி (கடலூர்) 11 செ.மீ, பரமக்குடி(ராமநாதபுரம்), பரங்கிப்பேட்டை(கடலூர்) தலா 7 செ.மீ, இல்லயான்குடி(சிவகங்கை), குடவாசல் (திருவாரூர்) தலா 6 செ.மீ, அய்யம்பேட்டை (தஞ்சாவூர் ), மயிலாடுதுறை தலா 5 செ.மீ.
தமிழகம் மற்றும் புதுவையை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை இன்று வரை 9 விழுக்காடு கூடுதலாக பெய்துள்ளது”.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.