Published : 18 Dec 2020 11:41 AM
Last Updated : 18 Dec 2020 11:41 AM

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தடையை மீறி திமுக கூட்டணிக்கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் இன்று நடக்கும் திமுக தோழமைக்கட்சிகளின் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் தடையை மீறி உண்ணாவிரதப்போராட்டம் தொடங்கியது.

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதை எதிர்த்து, அந்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வேளாண் சட்டங்களுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும் திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக அதன் தோழமைக்கட்சிகளுடன் இணைந்து உண்ணாவிரதப்போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.

திமுக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“போராட்டத்தில் “மாவோயிஸ்டுகள்” புகுந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மண்ணை வாரியிறைத்துப் பேசியிருப்பதற்கும், மத்திய அமைச்சர்கள் பலரும் இதுபோன்ற அபத்தமான கருத்துகளை வெளியிட்டு வருவதற்கும் திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும், உணவுப் பாதுகாப்பிற்கு அடித்தளமாகவும் விளங்கும் விவசாயிகளையும்- அவர்களின் உரிமைகளையும் புறக்கணித்து; தொடர்ந்து எதேச்சதிகாரப் போக்குடனும்- ஆணவப் பேச்சுகளுடனும் இப்போராட்டத்தைக் கையாளும் மத்திய பாஜக அரசினையும் - அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கத் தைரியமின்றி அடங்கி ஒடுங்கி இருக்கும் முதல்வர் பழனிசாமியையும் கண்டித்தும்.

டெல்லியில் கரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் - அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு அளித்தும் - டிச.18 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அறவழியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்களும் - நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும்”.

என அறிவித்திருந்தது.

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால் தடையை மீறி இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் வைகோ, கே.பால்கிருஷ்ணன், முத்தரசன், தங்கபாலு, ஜவாஹிருல்லா, திமுகவின் முன்னணி தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்தில் முதலில் ஸ்டாலின் தொடக்க உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x