Published : 18 Dec 2020 03:17 AM
Last Updated : 18 Dec 2020 03:17 AM
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் தொன்மையான கலைநயம் மிக்க 2 கல்தூண்கள் திருடி விற்பனை செய்யப்பட்டிருப்பது, 25 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அவற்றை மீட்க, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வரு கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த இக்கோயில், குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பின்னர், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. இக்கோயிலில் கலைநயமிக்க சிலைகளுடன் கூடிய நூற்றுக்கணக்கான தூண்களால் ஆன பிரகார சுற்று மண்டபம் உள்ளது.
கடைசியாக கடந்த 1604-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்பு, 4 நூற்றாண்டுகளுக்குப் பின்னர், தற்போது, இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் பிரகார மண்டபத்தில் இருந்த 2 அலங்கார கல்தூண்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய்குமார்சிங் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், 1992 முதல் 1995-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், கோயிலில் உள்ள கல்மண்டபத்தில் இருந்து கலைநயமிக்க 4 கல்தூண்களை திருட முயற்சி நடந்திருப்பதும், ஆனால், 2 கல்தூண்களை மட்டும் திருடி சென்னைக்கு கொண்டு சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் இருக்கும் இவ்விரு கல்தூண்களையும் மீட்பதற்கான நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுஉள்ளனர். இச்சம்பவம் 25 ஆண்டுகளுக்கு பின்பு தெரியவந்திருப்பது, பக்தர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை வட்டாட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT