Last Updated : 09 Oct, 2015 07:16 PM

 

Published : 09 Oct 2015 07:16 PM
Last Updated : 09 Oct 2015 07:16 PM

பழம்பெரும் புல்லாங்குழல் இசைக் கலைஞர் என்.ரமணி காலமானார்

பழம்பெரும் புல்லாங்குழல் இசைக்கலைஞர் என்.ரமணி சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 82.

புற்று நோய் காரணமாக இவர் காலமானார்.

இவருக்கு மனைவி, மற்றும் இரண்டு மகன்கள், பேரக்குழந்தைகள் உள்ளனர். பேரன் அதுல் குமாரும் புல்லாங்குழல் இசைக்கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

1934-ம் ஆண்டு திருவாரூரில் பிறந்த ரமணி தனது ஆரம்ப கால கர்நாடக இசைப் பாடங்களை அவரது தாய்வழி தாத்தா ஆழியூர் நாராயணசாமி ஐயரிடம் பயின்றார்.

ரமணியின் தாயார் சாரதாம்பாள் கர்நாடக இசையில் புலமை பெற்றவர். இவர், தங்கள் குடும்பத்து உறவினரான புல்லாங்குழல் இசை மேதை மாலி போல் ரமணியும் புல்லாங்குழலில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பாடுபட்டார்.

இவரது முதல் கச்சேரி சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் நடைபெற்றது. நாகப்பட்டிணத்தில் கச்சேரி செய்த போது ரமணி அவர்களின் புல்லாங்குழல் இசையை மேதை டி.ஆர்.மகாலிங்கம் (மாலி என்று அழைக்கப்படும்) ரசித்துக் கேட்டதோடு, சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், இதனையடுத்து 1950ம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தார் ரமணி.

ரமணி ஒரு பரிசோதனை முயற்சிக் கலைஞர். திருவனந்தபுரம் வெங்கட்ராமன் வீணை, லால்குடி ஜெயராமன் வயலினுடன் ரமணியின் புல்லாங்குழல் இசையும் சேர அந்த இசை பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் தனது சிறுபிராய நண்பரும் கிளாரெனெட் இசைக் கலைஞருமான ஏ.கே.சி.நடராஜனுடன் சேர்ந்து வாசித்துள்ளார்.

இது குறித்து நடராஜன் கூறும்போது, “இதற்கான கருத்து என்னிடமிருந்து உருவானதே. ரமணியின் புல்லாங்குழல் ஓசை என்னுடைய கிளாரினெட் ஓசையினால் அமிழ்ந்து விடாமல் இருக்க நான் அதிக அளவு ஓசையைக் குறைத்து வாசித்தேன். ராக ஆலாபனையாகட்டும், கீர்த்தனைகளாகட்டும், லயத்தை புரிந்து கொள்வதிலாகட்டும் ரமணியை ஒருசிலரே நெருங்க முடியும். இசை உலகுக்கு இவரது மரணம் ஒரு பெரிய இழப்பு. எனது நண்பரை நான் இழந்து விட்டேன்” என்றார். இவர் திருவாரூர் நாட்களிலிருந்தே ரமணியுடன் நெருங்கிப் பழகியவர்.

அவர் மேலும் கூறும் போது, மணிக்கணக்காக ரமணி பயிற்சி செய்வார். நாங்களிருவரும் இசை பற்றி நிறைய கருத்துகளை பரிமாறிக் கொண்டிருக்கிறோம், எங்களுக்கு சந்தேகமிருந்தால் பெரிய இசை மேதைகளிடம் செல்வோம்.

வரலாற்றாய்வாளர் வி.ஸ்ரீராம் என்பவர் கூறும்போது, “கே.வி.நாராயணசாமியுடன் இவர் சேர்ந்து வாசிக்கும் போது அது ஒரு பெரிய இசை விருந்து” என்றார்.

புல்லாங்குழல் இசை மேதை ஹரிபிரசாத் சவுராசியா, எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், என்.ராஜம், பண்டிட் விஸ்வ மோகன், ஏன் மறைந்த மாண்டலின் ஸ்ரீநிவாசுடனும் இணைந்து ஜுகல்பந்தி வாசித்துள்ளார் ரமணி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x