Published : 18 Dec 2020 03:18 AM
Last Updated : 18 Dec 2020 03:18 AM
திருவனந்தபும் கோட்டத்தின்கீழ் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள ரயில்வே வழித்தடங்களை, மதுரை கோட்டத்துக்கு மாற்ற முடியாது என்று ரயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது.
`திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை, மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை, கடந்த 1981-ம் ஆண்டிலிருந்தே எழுப்பப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் கோட்டத்தில் இருப்பதால், அதன்கீழ் தமிழகத்திலுள்ள ரயில் நிலையங்களும், வழித்தடங்களும் புறக்கணிக்கப்படுவதாக, பயணி கள் சங்கங்கள் தொடர்ந்து புகார்களைத் தெரிவித்து வருகின்றன. திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள 625 கிமீ தூரம் உள்ள இருப்புப்பாதை வழித்தடத்தில், கன்னியாகுமரி – நாகர்கோவில் - திருவனந்தபுரம் 87 கிமீ தூரமும், நாகர்கோவில் - திருநெல்வேலி 74 கிமீ தூரமும் நாகர்கோவில் துணை கோட்டத்தின்கீழ் வருகின்றன. இதனை, மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று, பயணிகள் சங்கங்கள் தெரிவித்து வருகின்றன.
`கடந்த 8-7-2019-ம் தேதி மாநிலங்களவையில் முன்னாள் எம்பி விஜிலா சத்தியானந்த் எழுப்பிய இது தொடர்பான கோரிக்கையில் ரயில்வே வாரியம் எடுத்த நடவடிக்கை என்ன?’ என்று, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் ராம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கேட்டிருந்தார்.
இதற்கு, ரயில்வே வாரிய அதிகாரி குல்தீப்சிங், `கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை மதுரை கோட்டத்துடன் இணைக்க எந்த ஒரு திட்டமும் ரயில்வே வாரியத்திடம் இல்லை’ என்று பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக, தென்மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி பி.எட்வர்ட் ஜெனி கூறும்போது,
``கடந்த வாரம் ரயில்வேதுறை அறிவித்துள்ள சிறப்பு ரயில்களில் மதுரை- புனலூர் பயணிகள் ரயில், நாகர்கோவில் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் ஆகியவை, எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு ரயில்களும், திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கத்தில் அதிக ரயில்நிலையங்களில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தால் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிப்பு செய்யப்படுவதை, இது வெளிக்காட்டுகிறது.
கடந்த மாதம் திருவனந்தபுரம் கோட்டம் சார்பாக 22 வெவ்வேறு பணிகளுக்காக ரூ. 18.27 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு பணி கூட கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இல்லை. இந்நிலையில், ரயில்வே வாரியத்தின் பதில் தென்மாவட்ட பயணிகளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT