Published : 17 Dec 2020 09:14 PM
Last Updated : 17 Dec 2020 09:14 PM
தாமிரபரணி ஆற்று மணலில் அணுசக்திக்கு தேவையான தாதுக்கள் நிரம்பியிருப்பதாக வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையில் கூறப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து இது தொடர்பாக மத்திய அணுசக்தி துறை செயலர், அணுசக்தி ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் ஆகியோர் ஆய்வு நடத்தவும், அதுவரை மணல் அள்ள தடை விதித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் திருட்டை தடுக்கக் கோரி பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு பாலகிருஷ்ணன் தனி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது அகரம் பகுதியில் சட்டவிரோத மணல் குவாரி செயல்பட்டு வரும் இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவும், பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையில், தாமிரபரணி ஆற்று மணலில் அதிகளவு கனிமங்கள் நிரம்ப உள்ளது. குறிப்பாக கார்னெட், இலுமனைட், ருட்டைல், ஜிர்கான், லியூக்கோசீன், சில்லிமனைட், கைனைட், மோனோசைட் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன. இந்த கனிமங்கள் அணுசக்திக்கு தேவையான கனிமங்களாகும்.
நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதிகளவு அணுக்கள், கனிமங்கள் இருப்பதாக பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1942-43-ல் ஜேக்கப்சன் என்பவரால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன் பிறகும் தாமிரபரணி ஆற்று மணலில் உள்ள கனிமங்கள் குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.
அகரம் பகுதியில் 109077.17 கியூபிக் மீட்டர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. இதில் அணுசக்தி திறன் இருப்பதால் கலந்திருப்பதால் மத்திய அணுசக்தி துறை செயலர், அணுசக்தி ஆராய்ச்சி பிரிவு இயக்குநர், தமிழக தொழில் துறை மற்றும் பொதுப் பணித்துறை செயலர்களை நீதிமன்றமே முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறது. இவர்கள் தாமிரபரணி ஆற்று மணலை மத்திய ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்.
அதுவரை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளும் பணி தற்போது உள்ள நிலை அப்படியே இருக்க வேண்டும். யாரும் மணல் அள்ளக் கூடாது. ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள மணலை அங்கிருந்து எடுத்துச் செல்லாமல் பாதுகாத்து வைக்க வேண்டும். அதுவரை கட்டுமானப் பணிக்கு மணல் தேவைப்பட்டால் எம்.சாண்ட் உள்ளிட்ட பிற மணல் வகையை பயன்படுத்தலாம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை டிச. 21-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT