Published : 17 Dec 2020 09:12 PM
Last Updated : 17 Dec 2020 09:12 PM
சிறுவாணி அணையில் தொடர்ந்து நீர்மட்டம் சரிந்து வருவதால், அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவைக் குறைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி அணை, கேரள மாநிலம் பாலக்காட்டில், மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து பெறப்படும் நீர், வழியில் உள்ள 22 கிராமங்கள் மற்றும் மாநகராட்சியின் 32க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.
சிறுவாணி அணையின் மொத்தம் நீர்த்தேக்க உயரம் 50 அடி ஆகும். அதாவது, 878.50 மீட்டர் வரை தண்ணீரைத் தேக்கலாம். ஆனால், கேரளா அரசால், அணையின் பாதுகாப்புக் காரணங்களுக்காக 45 அடி உயரத்துக்கு வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. கடந்த பருவமழைக் காலங்களில் சிறுவாணி அணையில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்தது. மேலும், 45 அடியைக் கடந்து விடக்கூடாது என்பதற்காக, நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை அடையும்போது, கேரள அரசால் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
பருவமழைக் காலங்கள் முடிந்த தற்போதைய சூழலில், சிறுவாணி அணைப் பகுதியில் மழை முற்றிலும் குறைந்துள்ளது. இருப்பினும், அவ்வப்போது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மட்டும் 2 அல்லது 5 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்து வருகிறது. மேலும், தினமும் சராசரியாக 95 எம்.எல்.டி அணையில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு கோவை மாவட்டத்துக்கு விநியோகிக்கப்படுகிறது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோவைப்பிரிவு செயற்பொறியாளர் செல்லமுத்து 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் இன்று (17-ம் தேதி) கூறும்போது, ''சிறுவாணி அணையில் மழை முற்றிலும் குறைந்துள்ளது. சிறுவாணி அணையில் கடந்த மாத இறுதியில் 44 அடி உயரத்துக்கும், கடந்த 1-ம் தேதி நிலவரப்படி 42.50 உயரத்துக்கும், கடந்த 5-ம் தேதி 42 அடி உயரத்துக்கும், கடந்த 10-ம் தேதி 41.8 அடி உயரத்துக்கும் அணையில் நீர்மட்டம் இருந்தது. இன்றைய நிலவரப்படி சிறுவாணி அணையில் 41 அடி உயரத்துக்கும் நீர்மட்டம் உள்ளது.
அதாவது, மீட்டர் கணக்கில் கூறினால் 876.89 மீட்டர் அளவுக்கு அணையில் நீர்மட்டம் உள்ளது. மழை பெய்யாததாலும், அணையில் இருந்து தொடர்ந்து அதிக எம்.எல்.டி. அளவுக்கு நீர் எடுப்பதாலும், அணையில் நீர்மட்டம் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. சிறுவாணி அணையில் தற்போது உள்ள நீர் இருப்பு, வரும் ஏப்ரல் மாதம் வரைக்கும் குடிநீர் விநியோகிக்கப் போதுமானதாக இருக்கும்.
இருப்பினும், ஓரிரு நாட்களில் சிறுவாணி அணையில் இருந்து தினமும் எடுக்கப்படும் நீரின் அளவில் சுமார் 5 முதல் 10 எம்.எல்.டி. வரை குறைக்கப்பட உள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT