Published : 17 Dec 2020 08:05 PM
Last Updated : 17 Dec 2020 08:05 PM
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வைகை ஆற்றில் நடக்கும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளதால் நகரப்பகுதியில் போக்குரவத்து ஸ்தம்பித்துள்ளது.
மதுரையின் மையமாக வைகை ஆறு ஓடுகிறது. வைகை ஆற்றின் வடகரையில் மதுரையின் ஒரு பகுதியும், தென் கரையில் மற்றொரு பகுதியும் அமைந்துள்ளது.
மதுரையின் வளர்ச்சி, வைகை ஆற்றை நம்பியிருந்தநிலை மாறி தற்போது ஆறு ஆண்டின்பெரும்பாலான நாட்களில் வறண்டு போய் காணப்படுகிறது. தற்போது மதுரையில் வடகிழக்கு பருவமழை அடைமழையாக பெய்யும்நிலையிலும் வைகை ஆற்றில் இலேசான நீரோட்டமே காணப்படுகிறது.
கரைபுரண்டு வெள்ளம் ஓடவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு புறமும் நான்குவழிச் சாலைகளும், பூங்காக்களும் அமைக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலைத்துறை சார்பிலும் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இப்பணிகள் கடந்த ஆண்டு முதலே நடக்கின்றன. தற்போது வரை நிறைவுப்பெறவில்லை. அதிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஆமைவேகத்தில் நடக்கின்றன.
தற்போது வரை 25 சதவீதம் பணிகள் கூட வைகை ஆற்றில் நடக்கவில்லை. வைகை ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதால் தற்காலிகமாக குருவிக்காரன் பாலம் தடை செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள தரைப்பாலம் வழியாக ஒட்டுமொத்த நகரப்போக்குவரத்தும் மாற்றிவிடப்பட்டுள்ளது.
அதனால், நகர்ப்பகுதியில் ஏற்கணவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டநிலையில் தற்போது அடைமழை பெய்யும்நிலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்ம்பித்துள்ளது.
அதனால், வைகை ஆற்று ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைவாக முடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT