Published : 17 Dec 2020 07:09 PM
Last Updated : 17 Dec 2020 07:09 PM

கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார்; ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க ஆணையம் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 814 கணிப்பொறி ஆசிரியர்கள் தேர்வின்போது, மூன்று தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கடந்து 2019ஆம் ஆண்டு 814 கணிப்பொறி ஆசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இப்பணியிடங்களுக்குத் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்றது. இப்பணியிடங்களுக்கு 26 ஆயிரத்து 882 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு 2019 ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 3 மையங்களில் இணையதளச் சேவை கிடைக்காமல் தேர்வு தடைப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் மொபைல் போன் எடுத்து வர அனுமதி அளித்ததாகவும், 3 மணி நேரத்திற்கு மேல் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி, இப்பணிக்கான தேர்வுப் பட்டியலை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை இன்று (டிச.17) விசாரித்த நீதிபதி பார்த்திபன், 3 தேர்வு மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தேர்வாகிய விண்ணப்பதாரர்களுக்குப் பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதேசமயம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருச்சி தனியார் பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டார்.

இந்த விசாரணை அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஆதிநாதன் ஆணையத்திற்கும் அறிவுறுத்தினார்.

நீதிபதி ஆதிநாதனுக்கு ஊதியமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும், அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x