Published : 17 Dec 2020 05:40 PM
Last Updated : 17 Dec 2020 05:40 PM
கோவையில் அகற்றப்பட்ட 951 மரங்களுக்கு ஈடாக புதிய மரங்கள் வளர்க்கத் தாமதிப்பதாகவும், மரங்கள் வளர்க்க ஒதுக்கப்பட்ட இடத்தில், மாற்றுத் திட்டத்தைச் செயல்படுத்துவதாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் மீது புகார்கள் எழுந்துள்ளன.
கோவை மாநகரில் இருந்து புறநகரப் பகுதிகளுக்கு அவிநாசி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகள் வழியாக, தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்கள் செல்கின்றன. அதிகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போக்குவரத்து நெரிசல், விபத்துகளைத் தடுக்க முக்கியச் சாலைகளை நான்கு மற்றும் ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்தல், மேம்பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாலைகள் விரிவாக்கம் செய்யும்போது, நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலையின் விரிவாக்கப் பணியின்போது, சாலையின் இருபுறமும் இருந்த பல நூறு மரங்கள் வெட்டப்பட்டன.
கடந்த 2010-11, 2011-12ஆம் ஆண்டு காலகட்டங்களில் மேற்கண்ட நெடுஞ்சாலைகளில் விரிவாக்கத்தின்போது மொத்தம் 951 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. பொதுவாக, சாலைகள் விரிவாக்கத்தின்போது, எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டனவோ, அதைவிடப் பத்து மடங்கு மரங்கள் நட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சூழலில், மேற்குறிப்பிட்ட வருடங்களில் கோவையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, புதிய மரங்களை நட, 2013-ம் ஆண்டு வரை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தரப்பில் எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மரங்களை நட வலியுறுத்தி, சமூக ஆர்வலரும், மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளருமான வே.ஈசுவரன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணை இறுதியில், கோவை கோட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால், பிரமாணப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், "அவிநாசி சாலையில் நீலாம்பூர் அருகே 10 ஏக்கர், சத்தி சாலையில் சரவணம்பட்டி அருகே 2 ஏக்கர், எல் அன்ட் டி பைபாஸ் சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் இடம் ஒதுக்கி ஆயிரக்கணக்கில் மரங்கள் நட்டு வளர்க்கப்படும்" எனக் கூறப்பட்டது.
இதைச் செயல்படுத்த வலியுறுத்தி 2016-ல் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது. இந்த மரங்கள் நடப்படும் பணி, தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் சரிவர மேற்கொள்ளப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
மாற்றுத் திட்டங்கள்
இதுகுறித்து, மனுதாரர் வே.ஈசுவரன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, "நீலாம்பூரில் தனியார் உணவகத்துக்கு எதிரே, தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான 10 ஏக்கர் இடம் மரங்கள் வளர்க்க ஒதுக்கப்பட்டன. அங்கு 2,000 எண்ணிக்கைக்கு மரங்கள் நடப்பட்டன. தற்போது இந்த இடத்தில் ஒன்றரை ஏக்கரில் மட்டுமே, மரங்கள் நடப்படும் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினரால் கூறப்படுகிறது. இங்கு மீதமுள்ள இடத்தில், மேம்பாலப் பணிக்காக கலவை இயந்திரங்கள் மூலம் கலவை தயாரித்தல், மேம்பாலப் பணியில் கிடைக்கும் கழிவுகளைக் கொட்டவும், அலுவலக அறைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர்களும் அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பின்புறம் நடப்பட்டு இருந்த ஏராளமான மரக்கன்றுகள் அழிக்கப்பட்டுள்ளன. எல் அன்ட் டி பைபாஸ் சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் கூறியபடி இடம் ஒதுக்கி மரக்கன்றுகள் நடவில்லை. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும்" என்றார்.
மரங்கள் நடப்படும்
இது தொடர்பாக, கோவை கோட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "அவிநாசி சாலை மேம்பாலப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நீலாம்பூரில், முன்னரே மரம் வளர்க்க ஒதுக்கப்பட்ட 10 ஏக்கரில், குறிப்பிட்ட இடத்தை கலவைகள் தயாரிக்க ஒதுக்க, மாநில நெடுஞ்சாலைத் துறையால் கேட்கப்பட்டுள்ளது. அக்கருத்துரு ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மரங்கள் நட வேண்டும் என நிபந்தனை அடிப்படையிலேயே அவர்களுக்கு ஒப்புதலும் வழங்கப்படும். அதுவும் தற்காலிகம்தான். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்தவுடன் கட்டமைப்பு அகற்றப்படும்.
தற்போது புகார் வந்ததால், கலவை இயந்திரக் கட்டமைப்புகள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. எல் அன்ட் டி பைபாஸ் சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் தகுந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் மரங்கள் நடப்படும். மாவட்டத்தின் மற்ற முக்கிய சாலையோரங்களிலும், காலி இடங்கள் கண்டறியப்பட்டு மரங்கள் நடப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT