Published : 17 Dec 2020 04:49 PM
Last Updated : 17 Dec 2020 04:49 PM
புதுச்சேரி மாநிலத்தில் ஜன.4-ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஹெச்.நாஜிம் இன்று (டிச.17) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதற்கே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது, ஜன.4-ம் தேதியிலிருந்து 1-ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் தொடங்கப்படும், காலை 10 முதல் 1 மணிவரை பள்ளிகள் செயல்படும், வருகைப் பதிவேடு இருக்காது என புதுச்சேரி கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கல்வியைப் பொறுத்தவரை தமிழக நடைமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் இதுவரை பள்ளிகள் திறப்பு குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர் சங்கம், பெற்றோர் சங்கத்தின் கருத்துகள், மருத்துவ ரீதியான விளக்கங்கள் பெற்ற பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு சரியானதா? எல்லோரையும் கலந்து ஆலோசித்துதான் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை அரசுதான் விளக்க வேண்டும். கரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருக்காது என யாராலும் சொல்ல இயலவில்லை. அதனால் மருத்துவத் துறையினரிடம் தெளிவாகக் கலந்து பேசி, எவ்வித ஆபத்தும் இருக்காது என மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையைப் பெற்ற பின்னர்தான் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பைச் செய்ய வேண்டும். அதனால் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில், ஏற்கெனவே 3 பாடப்பிரிவுகள் இருந்த நிலையில், புதிதாக 3 பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை அதிகக் கட்டணம் செலுத்த வேண்டிய பாடப்பிரிவுகளாகும்.
நிகழாண்டு வெளியிடப்பட்ட பாடப்பிரிவுகள் தொடர்பான சென்டாக் பட்டியலில், ஏற்கெனவே இருந்த 3 பாடப்பிரிவுகளும் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தப் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், நிகழாண்டு அந்த 3 பாடப் பிரிவுகளும் கிடையாது என திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காரைக்காலைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை, அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற நிலையில் 33 சதவீத இடங்களை ஒதுக்கத் தனியார் கல்லூரிகள் ஒப்புக் கொண்டுள்ளன.
ஆனால், 50 சதவீத இடங்களை ஒதுக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நடைமுறைகள் தொடர்கின்றன. மீதம் 17 சதவீத இடங்களும் ஒதுக்கப்பட்டால் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 60 இடங்கள் கிடைக்கும். அதனால் நீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு வரும் வரை இந்த 60 இடங்களுக்கான கலந்தாய்வை மட்டும் சென்டாக் அமைப்பு நிறுத்தி வைத்து, பின்னர் நடத்த வேண்டும். இதுகுறித்துப் புதுச்சேரி அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு நாஜிம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment