Published : 17 Dec 2020 11:09 AM
Last Updated : 17 Dec 2020 11:09 AM
படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துகின்ற வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (டிச. 17) வெளியிட்ட அறிக்கை:
"நீலகிரி மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட தனி சமுதாயமாகப் படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஏறத்தாழ 3 லட்சம் மக்கள்தொகை கொண்ட படுகர் இன மக்கள், 1951 ஆம் ஆண்டு வரை பழங்குடியின பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்கள் (Schedule Tribe).
ஆனால், காலப்போக்கில் படுகர் இன மக்கள் பழங்குடியின பட்டியலில் இருந்து எந்த காரணமும் கூறப்படாமல் நீக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து, படுகர் இன மக்கள் போராடி வருகிறார்கள். இவர்களது கோரிக்கை கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழக ஆட்சியாளர்கள் படுகர் இன மக்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் இருந்தது.
இந்நிலையில், இப்பிரச்சினை குறித்து தொடரப்பட்ட வழக்கில், நீலகிரியில் உள்ள மத்திய அரசின் பழங்குடியின ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையைப் பெற்று முடிவெடுக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த ஆணையை கடந்த 5 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்ட பழங்குடியின ஆராய்ச்சி மையம், கடந்த 22.10.2020 அன்று படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை தன்னிச்சையாக தள்ளுபடி செய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இது படுகர் இன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, அவர்களது வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு ஆயத்தமாகியுள்ளார்கள்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்குடியின ஆராய்ச்சி மையம் படுகர் இன மக்களிடம் எவ்வித ஆய்வும் செய்யாமல் இந்த முடிவு எடுத்திருப்பது, அந்த இன மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் வாழ்கிற தனித்தன்மை மிக்க படுகர் இன மக்களைப் பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்துகின்ற வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT