Published : 17 Dec 2020 03:16 AM
Last Updated : 17 Dec 2020 03:16 AM

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்கள் வழங்க முடிவு: ஓரிரு நாளில் அரசாணை வெளியாகிறது

சென்னை

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடியில் பணப்பலன்களை வழங்க அரசாணை ஓரிரு நாளில் வெளியாக உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம்தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 2,500 பேர் உட்பட 4,000 பேர் ஆண்டுதோறும் ஓய்வு பெறுகிறார்கள். ஏற்கெனவே போடப்பட்ட 13-வது ஒப்பந்தத்தின்படி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய முரண்பாடு, ஓய்வுபெற்ற மற்றும்தற்போது பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டுஏப்ரல் முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு போக்குவரத்து கழகங்களில் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஓய்வு காலபணப்பலன்களை இன்னும் வழங்கவில்லை.

வேலைநிறுத்த நோட்டீஸ்

இதேபோல், 13-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது. 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் போடுவது குறித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில்பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. இதேபோல், வேலைநிறுத்த நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மற்றொருபுறம் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்கும் வகையில்பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டு வருவதாக அரசுபோக்குவரத்து கழகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை வழங்க அடுத்த ஓரிரு நாளில் தமிழக அரசு அரசாணை வெளியிடவுள்ளது.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

5 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும்

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். அவர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுகால பணப்பலன்களை வழங்க அடுத்த சில நாட்களில் ரூ.962 கோடிக்கான அரசாணையை வெளியிட வுள்ளது.

இதன்மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ஓய்வுபெற்ற 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு உரிய பணப்பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரைகிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல், 14-வது புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்தும் அடுத்தடுத்து நடக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் சுமுகத் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேள னம் (ஏஐடியுசி) பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் கூறியதாவது:

முத்தரப்பு பேச்சுவார்த்தை

ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்றவர்களுக்கான பணப் பலன்கள் உள்ளிட்டவை வழங்காததைக் கண்டித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதற்கிடையே, சென்னையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்கவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது.

மேலும், 14-வது புதிய ஊதியஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x