Published : 16 Dec 2020 08:44 PM
Last Updated : 16 Dec 2020 08:44 PM
அடுத்த ஆண்டு முதல் மதுரை- தேனி இடையே விரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என்றும், தேனியில் இருந்து மதுரை வழியாகச் சென்னைக்கு நேரடியாகப் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது தொடங்கப்பட்ட மதுரை- போடி மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றக் கடந்த 2009-ம் ஆண்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணிகள் நடைபெற்றன. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கிலோ மீட்டர் தூரப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான பணிகள் துரிதமாக நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டி வரையிலான 21 கிலோ மீட்டர் தூர அகலப் பாதைகள் நிறைவடைந்த நிலையில், நாளை மாலை அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை ரயில்வே துறை உயர் அதிகாரிகள், ஆண்டிப்பட்டிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். டிராலி வண்டியில் தண்டவாளத்தில் சென்ற அதிகாரிகள் வழித்தடத்தை ஆய்வு செய்தனர்.
அதன் பின்னர் ஆண்டிப்பட்டி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைப் பார்வையிட்ட பின்னர், ரயில்வே துறையின் மதுரை கோட்ட மேலாளர் லெனின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ''மதுரை- போடி அகல ரயில் பாதைத் திட்டத்தில் தற்போது ஆண்டிப்பட்டி வரையில் பணிகள் முடிந்து இன்று சோதனை ஓட்டம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தேனி வரையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, மதுரையில் இருந்து தேனி வரையில் பயணிகள் விரைவு ரயில் சேவை தொடங்கப்படும்.
ஜூன் மாதத்தில் இருந்து தேனியில் இருந்து மதுரை வழியாகச் சென்னைக்கு நேரடியாகப் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. அக்டோபர் மாதத்தில் போடி வரையில் ரயில் சேவை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT