Published : 16 Dec 2020 08:13 PM
Last Updated : 16 Dec 2020 08:13 PM
சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 34 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு, விரைவில் மாவட்டம் முழுவதும் 100 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என, முதல்வர் பழனிசாமி பேசினார்.
சேலத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி இன்று (டிச.16) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.
சேலம் கொண்டாலம்பட்டி கோட்டம் 51 மற்றும் 52 பகுதியில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
"தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், முதன்முதலாக கொண்டலாம்பட்டி பகுதியில் இந்த மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சேலம் அரசு மருத்துவமனையில் 500 படுக்கை வசதி கொண்ட பிரசவப் பிரிவு, 50 படுக்கை வசதி கொண்ட பச்சிளம் குழந்தைப் பிரிவைத் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான நேரத்தில், உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவத் துறையை மேம்படுத்தி, நவீன உபகரணங்கள் மூலம் மக்களுக்கு நல்லதொரு சிகிச்சையை அளிக்கும் அரசாக அதிமுக விளங்கி வருகிறது.
சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 34 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு, விரைவில் மாவட்டம் முழுவதும் 100 மினி கிளினிக்குகள் தொடங்கப்படும். இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தொடங்கியுள்ளோம். இதன் மூலம் புதிதாக 1,650 மருத்துவ பட்டப்படிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புற்றுநோயைக் கண்டறிய 10 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன உபகரணங்களும், நவீன எக்ஸ்ரே கருவி, நீரிழிவு நோயைக் கண்டறிய நவீன உபகரணங்களை இந்த மருத்துவமனைகளில் வழங்கியுள்ளோம். புற்றுநோயைக் குணப்படுத்த தனி மருத்துவமனை ஏற்படுத்தியுள்ளோம். ஏழை, எளிய மக்கள் தனியார் மருத்துவமனையில் அதிக செலவு செய்து வருவதைத் தடுக்கும் விதமாக அரசு மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறோம்.
ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே இந்த அரசு நீடிக்குமா என சில சுயநல அரசியல்வாதிகள் எடை போட்டனர். அவர்களின் கனவெல்லாம் இன்றைக்குக் கானல் நீராகிவிட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதாவால் நாட்டு மக்களுக்காகத் தொடங்கப்பட்ட கட்சிதான் அதிமுக. இன்று சில கட்சிகள் குடும்பத்துக்காக அரசியல் கட்சி நடத்தி வருகின்றன. அது யார் என்று உங்களுக்கே தெரியும். அதிமுகவைப் பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியுன் என்பதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன்.
சேலத்தை சேர்ந்த திமுக எம்.பி. இப்போதே தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். சேலத்தில் எதுவுமே நடக்கவில்லை என்கிறார். மாநிலம் முழுவதும் பல மாவட்டங்கள் இருந்தாலும், சேலம் மாவட்டம் முதல்வர் மாவட்டமாக உள்ளது. மாதம் ஒரு முறை சேலம் மாவட்டத்துக்கு வந்து, அத்தனை பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக மாற்றிட புதிய பல பாலங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தில் ரூ.965.87 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சேலம் மாநகராட்சிப் பகுதியில் ரூ.14.6 கோடி மதிப்பீட்டில் 750 தெருவிளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய சாலைகள், தனி குடிநீர் திட்டம், புதிய பள்ளி வகுப்பறைக் கட்டிடம் எனப் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேலம் மாவட்டத்துக்கு மட்டும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சியில் எந்தத் திட்டமும் நடைபெறவில்லை என்று திட்டமிட்டு வேண்டுமென்றே பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மக்கள்தான் எஜமானர்கள், மக்கள்தான் நீதிபதிகள். அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள், எதிர்க்கட்சியினருக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக என்றும் அதிமுக இருக்கும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அரசு செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்.பி. சந்திரசேகரன், எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாஜலம், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT