Published : 16 Dec 2020 07:53 PM
Last Updated : 16 Dec 2020 07:53 PM

திருமலை நாயக்கர் மகால் இன்று திறப்பு: ரூ.7.85 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதால் கூடுதல் அழகு  

மதுரை

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3.25 கோடி மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3.60 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ள மதுரை திருமலை நாயக்கர் மகால் இன்று முதல் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்குத் திறக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் கோயிலுக்கு அடுத்து மதுரையைச் சுற்றிப்பார்க்க வருவோர் அதிகம் செல்லும் இடம் திருமலை நாயக்கர் அரண்மனை. பள்ளி, கல்லூரி மாணவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு இங்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். பிரம்மாண்டத் தூண்கள், பார்ப்போரை ஈர்க்கும் கட்டிடக்கலை, ரம்மியமான கலை வேலைப்பாடுகள்மிக்க மேற்கூரையைக் கொண்டுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, உலக அளவில் தேடப்படும் சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

தமிழகத்தில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் ஒன்றான இந்த அரண்மனை, தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. பிரிட்டிஷார் ஆட்சியில் கடைசியாக 1860-ல் இந்த மகால் புதுப்பிக்கப்பட்டது. போதிய பணியாளர்கள் இல்லாததால் அரண்மனை உள்ளேயும், வெளியேயும் சிதிலமடைந்து பொலிவிழந்து காணப்பட்டது. அரண்மனைக்கு வரும் காதல் ஜோடிகள், தூண்களில் தங்களை பெயர்களை எழுதிச் சேதப்படுத்தினர். புறாக்கள் நிரந்தரமாக அரண்மனை மேற்கூரையில் தங்கியிருந்ததால் அதன் எச்சங்கள் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தின. மேற்கூரை உடைந்து காணப்பட்டதால் மழைக் காலத்தில் ஒழுகவும் ஆரம்பித்தது.

கடந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் திருமலை நாயக்கர் அரண்மனை, கரோனாவுக்கு சில மாதங்கள் முன்பிருந்து ரூ.3.60 கோடியில் அதன் பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டது. மகால் உள்ளே பராம்பரிய முறைப்படி அதன் பிரம்மாண்டத் தூண்களும், மேற்கூரையும் சீரமைக்கப்பட்டது.

மகால் வெளியே பார்வையாளர்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.3.25 கோடியில் புல்வெளிப் பூங்கா, அலங்காரச் செடிகள், பாதங்களைப் பாதிக்காத கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகள், புல்வெளித் தரையின் நடுவில் செயற்கை நீரூற்று எனத் தற்போது திருமலை நாயக்கர் மகால் வண்ணமயமாகியுள்ளது.

வெயில், மழைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வளாகத்தில் பிரம்மாண்ட ஷேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சுற்றுலாப் பயணிகள் அமருவதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அரண்மனையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்காகத் தனித்தனியாக இ-டாய்லெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தும் கடந்த 3 மாதங்களாக இந்த அரண்மனை திறக்கப்படாமல் இருந்தது. மதுரை வரும் சுற்றுலாப் பயணிகள் திருமலை நாயக்கர் கட்டிய பழமையான அரண்மனையைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில் இன்று முதல் திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்குத் திறக்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் இன்னும் அரண்மனை திறக்கப்பட்ட விவரம் அறியாததால் பார்வையாளர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x