Published : 16 Dec 2020 06:56 PM
Last Updated : 16 Dec 2020 06:56 PM
தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த வாலி என்ற அந்தோணி மிக்கேல் சவுந்தரராஜ் (55) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் தருவைகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்த ச.வேல்ராஜ் (39), தாளமுத்துநகரைச் சேர்ந்த ரா.ஆனந்த் (40), ராமேஸ்வரம் புதுரோடு பகுதியைச் சேர்ந்த மு.உமையேஸ்வரன் (38), தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த ஆ.தனுஷ் (21), தென்காசி மேலகரம் தெப்பகுளம் தெருவைச் சேர்ந்த மு.தங்கப்பாண்டி (30), தூத்துக்குடி சிலுவைப்பட்டி கலைஞர் நகரைச் சேர்ந்த சூ.அன்பு (43) மற்றும் சிலுவைப்பட்டி சுனாமி காலனியைச் சேர்ந்த பெ.பாண்டி (23) ஆகிய 7 பேரும் கடந்த 11-ம் தேதி தருவைகுளத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்களது படகு நேற்று இலங்கை புத்தளம் மாவட்டம், கல்பிட்டி பகுதிக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் 7 மீனவர்களையும் சிறைப்பிடித்து கல்பிட்டி கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பிறகு 7 பேரையும் தனிமை மையத்தில் சிறை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 7 மீனவர்களின் உறவினர்களும் கவலை அடைந்துள்ளர். மீனவர்கள் 7 பேரையும், அவர்களது படகையும் விரைவாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT