Published : 16 Dec 2020 06:50 PM
Last Updated : 16 Dec 2020 06:50 PM

வாடகை பாக்கி இல்லை; லதா ரஜினிகாந்த் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பையும் செய்யவில்லை: ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை விளக்கம்

லதா ரஜினிகாந்த்: கோப்புப்படம்

சென்னை

வாடகை பாக்கி என்பதில் உண்மை இல்லை. லதா ரஜினிகாந்த் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பையும் செய்யவில்லை என, ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளைச் செயலாளரான லதா ரஜினிகாந்த் சென்னை, கிண்டி பகுதியில் ஆஷ்ரம் என்ற பெயரில் மேல்நிலைப் பள்ளியை நடத்தி வருகிறார். பள்ளி அமைந்துள்ள இடத்துக்கு வாடகை தொடர்பான பிரச்சினை இருந்து வருகிறது.

2013-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான வாடகை பாக்கியான ரூ.1 கோடியே 99 லட்சத்தை செலுத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014-ம் ஆண்டு இடத்தின் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்நிலையில், 2018-ம் ஆண்டு இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டு, 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் இடத்தைக் காலி செய்வது எனக் கல்வி அறக்கட்டளை ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக குறிப்பிட்ட கால அவகாசத்தில் காலி செய்ய முடியாததால், ஓராண்டு மேலும் கால அவகாசம் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இடத்தின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்கில், லதா ரஜினிகாந்த் கூடுதல் மனுவாகத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று (டிச.16) நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பையும் விசாரித்து நீதிபதி அளித்த உத்தரவில், இடத்தைக் காலி செய்ய ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளைக்கு 2021, ஏப். 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மீறினால் லதா ரஜினிகாந்த், அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார். மேலும், ஆஷ்ரம் பள்ளி தற்போது இயங்கும் முகவரியில் 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக, ஸ்ரீராகவேந்திரா கல்வி அறக்கட்டளை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிண்டியில் ஆஷ்ரம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தைக் காலி செய்யாத விவகாரத்தில் நீதிமன்றத்தை லதா ரஜினிகாந்த் அவமதித்து விட்டதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

கரோனா நெருக்கடி காரணமாகவும், நடப்புக் கல்வியாண்டு முடியாத காரணத்தினாலும் உடனடியாக அந்த வளாகத்தைக் காலி செய்ய முடியாது என்றும், ஏப்ரல் 2021ஆம் ஆண்டு வரை கால அவகாசம் வேண்டும் என்றும் ஏற்கெனவே நீதிமன்றத்தில் நாங்கள் கோரியிருக்கிறோம். மேலும், வாடகை, வரி என எந்த வித பாக்கியும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம்.

நாங்கள் சொன்ன காரணங்களையும், உறுதியையும் ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2021 ஏப்ரல் வரை காலி செய்ய அவகாசம் கொடுத்திருக்கிறது. மேலும், இந்த இடத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டாம் என்றும், புதிய இடத்தில் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

எனவே, லதா ரஜினிகாந்த் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பையும் செய்யவில்லை என்றும், அப்படிச் செய்ததாக வரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமல்ல, எங்கள் நிறுவனம் மற்றும் லதா ரஜினிகாந்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே பரப்பப்படுகின்றன.

மாணவர்களின் நலனை மனதில் வைத்து சரியான இடத்தைத் தேடி வருகிறோம். நீதிமன்றத்தில் நாங்கள் கொடுத்த உறுதியின்படி செயல்படுவோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x