Published : 16 Dec 2020 02:54 PM
Last Updated : 16 Dec 2020 02:54 PM
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இடைத்தரகர்கள்தான் போராட்டம் நடத்துகின்றனர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு அச்சட்டங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாஜக சார்பில் காரைக்காலில் இன்று (டிச.16) பேரணி நடத்தப்பட்டது.
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கி மதகடி சிங்காரவேலர் சிலை வரை நடைபெற்ற பேரணிக்கு, பாஜக மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி தலைமை வகித்தார். கட்சியின் புதுச்சேரி மாநில விவசாய அணித் தலைவர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை நியமன உறுப்பினருமான வி.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் எதிராக நாடு முழுவதும் குறிப்பாக பிஹார், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள இடைத்தரகர்கள் 30 ஆயிரம் பேர் மற்றும் அவர்களை நம்பியுள்ள 3 லட்சம் கமிஷன் ஏஜெண்டுகள் மட்டுமே போராடுகின்றனர். விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என இதுவரை எவரும் சொல்லவில்லை.
நாடு முழுவதும் விவசாயிகள் ஆதரிக்கக்கூடிய சட்டங்கள் இவை. ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியின் கமிஷன் ஏஜெண்டுகள்தான் போராட்டத்தைத் தூண்டி விடுகின்றனர். போராட்டக் களத்தில் பாதாம், பிஸ்தா, இனிப்பு வகைகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். மசாஜ் சென்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் என்ற போர்வையில் சமூக விரோதிகள், நக்ஸலைட்டுகள் உள்ளே ஊடுருவியுள்ளனர். பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கோஷமிடுகின்றனர். தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலும், இறையாண்மைக்கு எதிரான வகையிலும் போராட்டம் நடக்கின்றது.
இந்த வேளாண் சட்டங்களைக் கொண்டு வருவோம் என 2016 தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிட்டுள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி எதைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்கக்கூடிய கட்சிகளாக காங்கிரஸும், திமுகவும் உள்ளன. இக்கட்சிகள் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் எதிரானவை. பாஜகவைப் பொறுத்தவரை விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பாகக் கருதுகிறது. இந்தச் சட்டங்களால் ஏழை விவசாயிகளின் நலன் காக்கப்படும். விவசாய விளைபொருட்களுக்கான சரியான விலை விவசாயிகளைச் சென்றடைய இந்தச் சட்டம் வழிவகுக்கும்".
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்தார்.
பேரணியின்போது, இந்தச் சட்டங்களால் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் இடத்தில் விற்பனை செய்ய முடியும், நாட்டின் எந்தவொரு பகுதியிலும் விற்பனை செய்ய முடியும், விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களைச் சேமித்து வைக்கவும், வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் முழு சுதந்திரம் அளிக்கப்படும், விவசாயிகளுடன் எந்தவொரு மூன்றாவது நபரும் ஒப்பந்தம் செய்துகொண்டு, அதற்கேற்ப உற்பத்தியை அதிகப்படுத்த முடியும் என்பன உள்ளிட்ட விவசாயிகளுக்கான பல்வேறு சாதக அம்சங்கள் குறித்து பாஜகவினர் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர்.
பாஜக மாநிலப் பொதுச் செயலாளர்கள் ஏம்பலம் செல்வம், மோகன்குமார், மாநிலத் துணைத் தலைவர் எம்.அருள்முருகன், மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு, மாவட்டப் பொதுச் செயலாளர்கள் செந்திலதிபன், அப்பு (எ) மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT