Published : 16 Oct 2015 01:51 PM
Last Updated : 16 Oct 2015 01:51 PM
சேலம் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சார்பில் மூலிகை தோட்டம் அமைத்து மாணவியர்களுக்கு நேரடி செயல்முறை கல்வி கற்பிக்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர்.
சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள பெண்கள் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை மற்றும் மரம் வளர்ப்புக் குழுமம் சார்பில் கல்லூரி முதல்வர் செ.மணிமொழி தலைமையில், தாவரவியல் துறை தலைவர் க.விஜயகுமாரி, ஒருங்கிணைப் பாளராக செயல்பட்டு வருகிறார்.
கல்லூரியில் பயிலும் தாவரவியல் பாடப்பிரிவு மாணவி யர்கள் நேரடியாக தாவரங்களின் தன்மை, அதன் குணாதிசயங்கள் மற்றும் தாவரங்களின் வளர்ச்சி குறித்த கல்வி முறையை நேடியாக கண்டறிந்து, பாடம் பயிற்றுவிக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, கல்லூரி வளாகத்தில் தாவரயில் துறை சார்பில் மூலிகை தோட்டம் கடந்த 12-ம் தேதி அமைக்கப்பட்டது.
தோட்டத்தில் காட்டாமணக்கு, புலிச்சை, இன்சுலின் தாவரம், குப்பைமேனி, குண்டுமணி, இஞ்சி, கீழாநெல்லி, பேய்விரட்டி, வசம்பு, சிறுநெறி, மூக்கரட்டை உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான அரியவகை மூலிகை தாவரங்கள் பயிரிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் அலோபதி மருந்துகளால் நோய்கள் முழுமையாக குணமடைந்த போதிலும் அதன் பக்க விளைவுகளால் மக்கள் துன்புற்று வருகின்றனர். எனவே, வளரும் சமுதாயத்தின் முக்கிய அங்கமாகிய மாணவியர்களுக்கு மூலிகைச் செடிகளின் முக்கியத்துவத்தை அறியும் பொருட்டு மூலிகை பண்ணையை கல்லூரி மாணவியர்களாலேயே பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்குள்ள மூலிகை செடிகளின் மூலம் இருதய நோய், நீரிழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா, சளி, காய்ச்சல், கொழுப்பு குறைதல், புற்று நோய், மூட்டு வலி, மலச்சிக்கல், கண்நோய்கள், வயிற்றுப்போக்கு, ரத்த சோகை, சிறுநீரகக் கோளாறுகள், பாம்புக்கடி, தேள்கடி, வாதநோய், அம்மை நோய், காலரா, மஞ்சள்காமாலை, தோல் வியாதிகள் போன்ற நோய்கள் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாமல் பூரணமாக குணமடையும் தன்மையை கல்லூரி பேராசிரியர்கள் மாணவியருக்கு நேரடி செயல்முறை விளக்கத்துடன் கற்பித்து வருவது மாணவியரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் மணிமொழி கூறுகையில், ‘‘தாவரவியல் துறை பேராசிரியர்கள் புதிய முயற்சியாக கல்லூரியில் மூலிகை தோட்டம் அமைத்து, மாணவியர்களுக்கு கற்பித்து வருகின்றனர். தமிழகத்தில் குயின் மேரீஸ் கல்லூரிக்கு அடுத்தபடியாக சேலம் பெண்கள் கலைக் கல்லூரியில் மூலிகை தோட்டம் அமைத்து, நேரடி கல்வி முறையை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் மாணவியர்கள் தாவரவியல் பாட சம்பந்தமாக கண்கூடான கல்வி கற்று, பல்வேறு சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் மூலம் தெளிவுபெற வசதியாக உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT