Last Updated : 16 Dec, 2020 03:15 AM

 

Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் விளைநிலங்கள் மதிப்பு உயர்வு: புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி

கோப்புப்படம்

திருப்பூர்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு -அவிநாசி திட்டத்துக்கு, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1652 கோடி மதிப்பில் அத்திக்கடவு - அவிநாசி பாசனம், நிலத்தடி நீர் செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் என்ற பெயரில் நிறைவேற்றப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ் 200 மீட்டருக்கு அப்பால் பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஈரோடு, திருப்பூர்,கோவை மாவட்டங்களில் வறட்சி பகுதிகளிலுள்ள 1044 குளம், குட்டைகளுக்கு முதற்கட்டமாக நீர் நிரப்பும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 50 லட்சம் மக்கள் வரைபயனடைவார்கள் என தெரிகிறது.

தற்போதைய சூழலில், ஈரோடுமாவட்டத்தில் பவானி, நல்லக வுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, கோவை மாவட்டத்தில் அன்னூர் ஆகிய 6 இடங்களில் மிகப்பெரும் நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல மொத்தமாக 105 கி.மீ. தூரத்துக்கு பிரதான குழாயும், 953 கி.மீ. தூரத்துக்கு கிளை குழாயும் அமைக் கப்படுகிறது. பிரதான சாலைகள் மற்றும் கிராமத்து சாலைகளின் ஓரமாக பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், இத்திட்டத்தின் வரவாலும், விரைவில் தண்ணீர்கிடைத்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்ப டையிலும் விளைநிலங்களின் மதிப்பு அதிகரித்துள்ளதாக, திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ள பகுதிகளில் விளைநிலங்களை வைத்துள்ளவிவசாயிகள் தகவல் தெரிவிக்கின்ற னர்.

இதுகுறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்காக போராடிய குழு வினரின் ஒருங்கிணைப்பாளரான எம்.வேலுசாமி, 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல்ஆற்றின் வடக்கே மற்றும் ஈரோடுமாவட்டம் கீழ்பவானி பாசன வாய்க்காலுக்கு தெற்கே இடைப்பட்ட தூரத்தில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் பயன்பெறவுள்ள அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களின் மதிப்பு 5 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, ரூ.10 லட்சத் துக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ஏக்கர் விளைநிலம், தற்போது ரூ.50 லட்சம் அளவுக்கு விற்கப்படுகிறது. விளைநிலங்கள் தவிர தரிசு நிலங்கள், குடியிருப்புகள் கட்டப் படும் நிலங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

விவசாயம் செய்து உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்றசூழலிலும், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தியில் பெரிய லாபம்கிடைக்கவில்லை என்ற போதிலும், விளைநிலங்களின் மதிப்பு உயர்ந்துள்ளது, விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு இதுவும் ஒருவகை லாபம்தான். இதற்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால் தண்ணீர் வந்துவிடும் என்றநம்பிக்கையே முக்கிய காரணம். பயிர்கள் எதுவும் விளையவில்லை என்றாலும், அந்த நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x