Published : 16 Dec 2020 03:15 AM
Last Updated : 16 Dec 2020 03:15 AM
கரோனா ஊரடங்கு விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘கட்டிடமே கற்றல் உபகரணம்' என்ற புதுமையான திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி கட்டிங்கள் அனைத்தும் கற்றல் உபகரணங்களாக புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில் ஒன்றுதான் ‘கட்டிடமே கற்றல் உபகரணம்' (Building as Learning Aid) திட்டமாகும். 'பாலா' (BaLA) எனப்படும் கட்டிடமே கற்றல்உபகரணம் திட்டத்தை தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் தங்கள் பள்ளிகளில் முழுமையாக செயல்படுத்துகிறது. இதற்காக பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் வழிகாட்டுதலோடு மாநகராட்சி பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் கற்றல் உபகரணங்களாக உருமாறி வருகின்றன.
இது குறித்து மாநகராட்சிஆணையர் வீ.ப.ஜெயசீலன் ‘இந்து தமிழ் திசை' நாளிதழிடம் கூறியதாவது:
பாலா திட்டம் மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உலகளவில் இந்த திட்டம் பெரிதாகபேசப்பட்டாலும் தமிழகத்தில்அதிகமாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 18 பள்ளிகளிலும் இதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த திட்டத்தில் பள்ளி கட்டிடங்களின் ஒவ்வொரு அங்கமும் மாணவர்களின் கற்றல் உபகரணங்களாக இருக்கும். உதாரணத்துக்கு வகுப்பறை கதவை திறக்கும் போது கோணங்களை குறிக்கும் வகையில் தரையில் வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கும். அதுபோல் ஜன்னல்கள் சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
கட்டிடத்தில் உள்ள ஒரு தூணைமையமாக வைத்து சூரிய குடும்பம்வரையப்படும். படிக்கட்டுகளில் வாய்ப்பாடுகள் எழுதி வைக்கப்படும். கட்டிடத்தின் மேற்கூரை, மின்விசிறி போன்றவைகளும் ஏதாவது ஒரு பாடத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்படும்.
மேலும், அனைத்து சுவர்களிலும் இயற்கை, வேளாண்மை,சுகாதாரம் போன்ற பொது பாடங்கள் குறித்த ஓவியங்கள் வரையப்படும். இவற்றை பார்க்கும் மாணவர்கள் தங்கள் பாடங்களை நேரடியாக அனுபவித்து மிகவும் எளிமையாக கற்பார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக தூத்துக்குடி பாண்டுரங்கன் தெரு, லெவிஞ்சிபுரம், தேவர்காலனி, தங்கமாள்புரம் ஆகியஇடங்களில் உள்ள 4 மாநகராட்சிபள்ளிகளில் ரூ.24.90 லட்சம் செலவில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாநகராட்சியில் உள்ள18 பள்ளிகளிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 5 மாநகராட்சி பள்ளிகள்ரூ.8.29 கோடியில் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றப்படுகின்றன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் புதிய கட்டிடங்கள்,அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. இந்த5 பள்ளிகளில் உள்ள அனைத்துவகுப்பறைகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக இருக்கும்.
ஆங்கிலப் பயிற்சி
மேலும், இந்தப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ,மாணவியருக்கும் தனித்தனியாக டேப் எனப்படும் கையடக்க கணினி வழங்கப்படும். தினமும் 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்பு மூலம்அவர்களுக்கு ஆங்கிலப் பேச்சாற்றல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த பணிகளும் விரைவில் முடிவடையும்.
தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் போது தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT