Published : 15 Dec 2020 08:16 PM
Last Updated : 15 Dec 2020 08:16 PM
கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், ஆனைமலை, கருமத்தம்பட்டி பகுதிகளில் புதிதாக 3 மகளிர் காவல் நிலையங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ள காவல்துறையினர், அதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவை மாவட்டக் காவல்துறை நிர்வாகம், காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமையில் கருமத்தம்பட்டி, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 6 உட்கோட்டங்களுடன், 33க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் இயங்கி வருகிறது. 800க்கும் மேற்பட்ட காவலர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.
தற்போது, மாவட்டக் காவல்துறையில் துடியலூர், பேரூர், பொள்ளாச்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையம் பொள்ளாச்சி, வால்பாறை உட்கோட்டத்துக்குட்பட்ட 15 காவல் நிலைய எல்லைகளைக் கவனித்து வருகிறது.
துடியலூர் மகளிர் காவல் நிலையம் பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய உட்கோட்டங்களை முழுமையாகவும், கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் நிலையங்களில் குறிப்பிட்ட பகுதி என 9 காவல் நிலைய எல்லைகளைக் கவனித்து வருகிறது.
பேரூர் மகளிர் காவல் நிலையம் பேரூர் உட்கோட்டம் முழுமையாகவும், மீதமுள்ள கருமத்தம்பட்டி உட்கோட்டத்துக்குட்பட்ட காவல் நிலையங்களின் எல்லைகளையும் கவனித்து வருகிறது. மேற்கண்ட மகளிர் காவல் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாகத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
அதிகரிக்கும் குற்றங்கள்
இதுதொடர்பாகச் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ''தற்போதைய சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களை மகளிர் காவல்நிலையக் காவலர்கள் பிரத்யேகமாக விசாரித்து வருகின்றனர். தவிர, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கண்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில் தற்போதுள்ள 3 மகளிர் காவல் நிலையங்களின் எல்லைகளும் அதிக அளவில் உள்ளன.
இதனால் பணிச்சுமையின் காரணமாக இங்குள்ள காவலர்களால் அனைத்து வழக்குகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியாமல் வழக்கு விசாரணை, விழிப்புணர்வுப் பணிகள் போன்றவை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. மேலும், தொலைதூரங்களில் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக வந்து புகார் அளிப்பதில் சிரமங்கள் உள்ளன. இதைத் தடுக்க மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாவட்டக் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்றனர்.
அரசுக்குக் கருத்துரு
இது தொடர்பாக மாவட்டக் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறும்போது, ''மாவட்டக் காவல்துறையில் தற்போது 3 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க பிரத்யேகமாகக் கூடுதல் எஸ்.பி. உள்ளார். தற்போது, மேட்டுப்பாளையம், ஆனைமலை, கருமத்தம்பட்டி ஆகிய இடங்களில் புதியதாக 3 மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டு, கருத்துரு தயாரிக்கப்பட்டு வருகிறது. இக்கருத்துரு சில நாட்களில் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரசு ஒப்புதல் அளித்தவுடன், 3 புதிய மகளிர் காவல் நிலையங்கள் மாவட்டக் காவல்துறையில் தொடங்கப்படும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT