Published : 15 Dec 2020 07:14 PM
Last Updated : 15 Dec 2020 07:14 PM
”தமிழுக்கு துரோகம், தமிழர்களுக்கு துரோகம், தமிழ்நாட்டுக்குத் துரோகம் இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை. இவர்களுக்கு கொள்ளை மட்டுமே இலக்கு. இந்தக் கூட்டத்தைக் கோட்டையை விட்டுவிரட்டுவதற்கு திண்டுக்கல் மக்கள் சபதம் எடுக்கவேண்டும்” என திண்டுக்கல் மாவட்டம் திமுக சார்பில் நடந்த காணொலி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்ற கூட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 150 இடங்களில் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 150 இடங்களில்திரைகள் அமைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது.
இதில் தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல திட்டங்கள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். திண்டுக்கல்லை தன் பெயரில் கொண்டுள்ள அமைச்சர் சீனிவாசனால் திண்டுக்கல்லுக்கு ஒரு குண்டுமணி அளவுகூட பலன் இல்லை. அம்மா இட்லி சாப்பிட்டார், அம்மா சட்னி சாப்பிட்டார் என நாட்டிற்கு நாங்கள் பொய்யைத்தான் சொன்னோம் என்றவர். அவர் ஐந்து ஆண்டுகள் அவரது தொகுதிக்கு என்னசெய்தார் என சொன்னால் நான் என்னை திருத்திக்கொள்கிறேன்.
திண்டுக்கல்லை மாநகராட்சியாக அறிவித்தார்கள். அதற்கு போதுமான நிதி பெற்றுத்தந்தாரா. குடிநீர் பிரச்சினையை தீர்த்தாரா, குளங்கள் அனைத்தையும் தூர்வாரிவிட்டாரா. பாலகிருஷ்ணாபுரம் பாலம் கட்டும் பணி ஏழு ஆண்டுகள் ஆகியும் முடிவடையவில்லை. திண்டுக்கல் பேருந்துநிலையம் புதுப்பிக்கப்படவில்லை. பாதளாசாக்கடைத்திட்டம் முழுமையடையவில்லை. இதற்கெல்லாம் பதில் சொல்வாரா அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன். இது திண்டுக்கல் மக்கள் கேட்கவேண்டிய கேள்விகள்.
நான் விவசாயி எனும் முதல்வர் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் என்னசெய்தார் என்று சொன்னாரா?
திமுக ஆட்சி சாமானியர்களுக்கான ஆட்சியாகத்தான் இருந்தது. திமுக கொண்டுவந்த திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அனைத்து தரப்பினரையும் துன்பத்தில் துடிக்கவிட்ட ஆட்சி தான் அதிமுக ஆட்சி. ஏழைகளுக்கு இவர்கள் செய்தது என்ன. இவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை வேண்டுமானால் பட்டியலிடலாம்.
மத்திய அரசுக்கு மாநில உரிமைகள் எதையெல்லாம் தாரைவார்த்தார்கள் எனப் பட்டியலிடலாம்.
முதல்வர் பழனிச்சாமி தன்னைப்போல ஊர்ந்துபோகச்சொல்கிறாரா. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு துரோகம் விளைவித்த அரசு தான் அதிமுக அரசு.
பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை ரத்து செய்தது மத்திய அரசு. இது அவர்களுக்கு படிப்பு எதற்கு என சொல்வதற்கு சமம். இதை எடப்பாடி அரசு கண்டிக்கவில்லை.
குடியிருப்புச் சட்டத்தை ஆதரித்துவிட்டு மசூதிக்கு செல்ல எடப்பாடியால் எப்படி முடிகிறது. எடப்பாடியை சிறுபான்மையின மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
உண்மையான விவசாயியாக இருந்தால் வேளாண் சட்டத்தை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருப்பார். அவர் விவசாயி அல்ல வேடதாரி. பா.ஜ., பாதம் தாங்கிக்கொண்டிருக்கிறார்.
உலகத்தை ஈர்த்த விவசாயிகள் போராட்டத்தை உள்துறை அமைச்சரும், பிரதமரும் கண்டுகொள்ளாதது ஏன்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் பெண் என்றும் பாராமல் முன்னாள் எம்.எல்.ஏ, பாலபாரதியை இழுத்துச்சென்று கைது செய்துள்ளனர். இதற்குக் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் செம்மொழி நிறுவனத்தை பாழ்படுத்திவிட்டனர். இதற்கு பொறுப்பேற்கவேண்டியது மத்திய, மாநில அரசுகள் தான். தனியாக செயல்படும் நிறுவனத்தை ஒரு பல்கலையுடன் இணைப்பது நியாயமா.
தமிழ்மேல் பாசங்கொண்டவர் போல் ஏன் பிரதமர் நடிக்கவேண்டும். செம்மொழி நிறுவனத்தை காக்கும் பொறுப்பு தமிழக முதல்வருக்கு இல்லையா. இவர்களைப் பார்த்து தான் ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என பாரதியார் பாடினார். விவசாயியாக, ஏழைத்தாயின் மகனாக நடிப்பவர்களுக்கு இந்த தேர்தலில் முற்றுப்புள்ளிவைக்க வேண்டும்.
தமிழுக்கு துரோகம், தமிழர்களுக்கு துரோகம், தமிழ்நாட்டு துரோகம் இதுதான் பழனிசாமி ஆட்சியின் முப்பெரும் கொள்கை. இவர்களுக்கு கொள்ளை மட்டுமே இலக்கு. இந்தக் கூட்டத்தை கோட்டையை விட்டுவிரட்டுவதற்கு திண்டுக்கல் மக்கள் சபதம் எடுக்கவேண்டும். பிரிட்டீஸ் ஆட்சிக்கு எதிராக
தென்நாட்டு மாவீரர்கள் ஒன்று திரண்ட ஊர் திண்டுக்கல். எனவே தென்னகத்தின் குருசேத்திரம் திண்டுக்கல் என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT