Published : 15 Dec 2020 06:21 PM
Last Updated : 15 Dec 2020 06:21 PM

நான் காந்திக்கு மட்டும்தான் பி டீம்: கோவில்பட்டியில் கமல்ஹாசன் பேச்சு

கோவில்பட்டி 

நான் காந்திக்கு மட்டும் பி டீம் என கோவில்பட்டியில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கமலஹாசன் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டு பேசும்போது, நாங்கள் செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீங்களும் செயல்புரியும் வீரர்களின் கரங்களை வலுப்படுத்தும் நேரம் வந்துவிட்டது.

அலிபாபாவுக்கே 40 பேர் தான். ஆனால், இங்கு 234 பேர் கூட்டமாக இருந்து கொண்டு நல்ல மக்கள் ஊழியர்களை வேலை செய்யவிடாமல் காலை இடறிவிடுவதே வேலையாக வைத்துக்கொண்டுள்ளனர்.

நீங்கள் சரியாக முடிவெடுக்க வேண்டும். இது தலைமுறைக்கு செய்ய வேண்டிய கடமை. ஆனால், நான் தலை நரைத்த பின்னர் செய்ய வந்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

நதிகளையெல்லாம் சாக்கடைகளாக, நல்லவர்களை கெட்டவர்களாக, நேர்மையாளர்களை ஊழல்வாதிகளாக மாற்றி என்ன ஆட்சி செய்து என்ன பயன். அது நாசமாக போகட்டும் என்று ஏன் இன்னும் மக்கள் சபிக்காமல் இருக்கின்றனர். எனக்கு சாபத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனால், செயலில் நம்பிக்கை உண்டு.

ஆட்சிக் கட்டிலில் அமர நேரமில்லாமல் வேலை செய்தால் தான் நாடு சற்று முன்னேறும். இப்போது நாங்கள் ஆட்சியை பிடிப்போம். இங்குள்ளவர்கள் உங்கள் சேவையில் ஊழியம் செய்யப் போகிறவர்கள். இவர்கள் பார்ப்பதற்கு உங்கள் சகோதரன், வாத்தியார் போல் இருக்கின்றனர். உங்களைப் பங்காளிகளாக, உறவினர்களாகப் பார்க்க விரும்புகிறோம்.

நாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளருடன் அமர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள். அதனை புரோ நோட்டில் எழுதிக்கொள்ளுங்கள். நான் சாட்சி கையெழுத்திடுகிறேன்.

அதில், இந்தப் பிரச்சினைகளை இந்த காலக்கட்டத்துக்குள் முடிக்கிறேன் என எழுத்தில் இருக்க வேண்டும். அந்த வேலையை அவர் செய்யத் தவறினால் ராஜினாமா கடித்துடன் அந்த ஒப்பந்தத்தை என்னிடம் வழங்குவார். அந்த ஒப்பந்தத்தின் பேரில் தான் எங்கள் வேட்பாளர்கள் வருவார்கள்.

நாங்கள் இருந்தோம் என்பதற்கான அடையாளம் நாங்கள் வாழ்ந்த சூழலை நன்றாக இருக்கிறது என்பது தான். அந்த அடையாங்களை விட்டுச்செல்ல வேண்டும் என்ற ஆசை கொண்டு ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது.

இதில் இளைஞர்களும் சேர வேண்டும். எங்கள் பலம் என்று நம்பிக்கொண்டிருப்பது இல்லத்தரசிகளையும், பெண்களையும், கல்லூரி மாணவ, மாணவிகளையும் தான்.

நான் காந்தியாருக்கு மட்டும் தான் ‘பி’ டீம். மற்றபடி ஒரு ‘ஏ’ டீம்மை உருவாக்கிக்கொண்டிருக்கிறேன் என்ற தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

வாக்கு வாங்க வேண்டும் என்று உங்களை கண்டுபிடிக்கத் தெரிந்தவர்களுக்கு, உங்களது குறைகளைக் கண்டுபிடிக்கத் தெரியாதா. எங்களால் முடியும் என நாங்கள் நம்புகிறோம். என்னுடன் உள்ளவர்கள் கிட்டத்தட்ட வெற்றியை தொட்டுப்பார்த்துவிட்டு வந்தவர்கள். மீண்டும் அவர்கள் வெற்றியைத் தொடப் போகிறார்கள் என்ற பயம் பலருக்கும் வந்துள்ளது. அது வர வேண்டும். தொடை நடுங்க வேண்டும்.

அவர்களின் உயிர்நாடி எங்கு இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். அவர்களது உயிர்நாடி ஊழல். ஊழல் தான் வாழ்வாதாரம். நாங்கள் அதை இல்லாமல் செய்யப்போகிறோம். மேல் மட்டத்தில் தொடங்கினால் கண்டிப்பாக கீழ் மட்டத்தில் பரவும்.

நான் மகாத்மாக்களை கண்டுபிடித்து விட்டேன். ஒவ்வொரு ஊரிலும் உள்ளனர். அவர்களை மதிக்க மறந்துவிட்டோம். அவர்களைப் போற்ற வேண்டும்.

நாங்கள் பெரிய பட்டியலே வைத்துள்ளோம். அதுபோக நீங்கள் எங்கள் வேட்பாளரிடம் இருக்கும் குறைகளை நீங்கள் பட்டியல் போட்டு கொடுங்கள். உங்கள் பேச்சைக் கேட்டுத்தான் இந்த ஆட்சி நடக்கும். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அரசு வழங்க வேண்டும். விவசாயி என்ற பட்டம் பெண்களுக்கும் பொருந்தும். எங்கள் திட்டத்தில் அவர்களுக்கு ஊதியம் இருக்கிறது. விவசாயம் தொட்டு விண்வெளி வரை பெண்களுக்கும், ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்.

அரசு அமைக்க வேண்டும் என்பதற்காக வந்துள்ளோம். நீங்கள் அனுமதி தந்தால் நான் நடத்திக்காட்டுகிறேன். இங்கே அனைவருமே செயல்வீரர்கள். செயல்படத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கு அதிகாரத்தைக் கையில் கொடுங்கள். இது தான் என்னுடைய கோரிக்கை. வாக்களிக்க பணம் வாங்க வேண்டாம் என நண்பர்களிடம் கூறுங்கள். அப்படியே வாங்குவது என்றால், அரசிடமிருந்து வாங்குவதாக இருந்தால் ரூ.5 லட்சம் கேளுங்கள். உங்களது மதிப்பை நீங்களே உயர்த்திக் கொண்டதால் உயரும். அவர்களுக்கு மிஞ்சாது என்பதால் கொடுக்க மாட்டார்கள். எடுப்பதற்காக வழி தான் கொடுப்பது. அதில், தர்ம காரியம் ஒன்றுமில்லை. இதுயெல்லாம் சுயநல வேட்டை. அதற்கு நீங்கள் பலியாகிவிட கூடாது.

காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட வேண்டாம் என நீங்கள் நாட்டுக்காக, நமது எதிர்காலத்துக்காக, வரும் தலைமுறையினருக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். இளைஞர்கள் ஒன்றுபட்டு இங்கே வாருங்கள். இது நல்ல இடம். நீங்கள் வந்தால் இது இன்னும் சிறந்த இடமாக மாறும்.

சிறு தொழில் செய்பவர்களை நாங்கள் தோளில் சுமைக்க ஆசைப்படுகிறோம். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கும் அரசாக இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறோம், என்றார் அவர்.

நிகழ்ச்சியில் மாநில் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ்., சி.கே.குமாரவேல், இளைஞரணி கவிஞர் சினேகன், வழக்கறிஞர் அணி ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் கதிரவன், வழக்கறிஞர் மாவட்டத் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x