Published : 15 Dec 2020 04:43 PM
Last Updated : 15 Dec 2020 04:43 PM
கரோனா ஊரடங்கால் 9 மாதங்களுக்குப் பின்பு திற்பரப்பு அருவியில் இன்று சமூக இடைவெளியுடன் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த மாதத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. இதைப்போல் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையையும் பார்வையிட கடந்த இரு மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதே நேரம் குமரி குற்றாலம் என்றழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் முறையான உத்தரவு வராததால் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கப்படவில்லை.
இதனால் 9 மாதங்களாக திற்பரப்பு அருவிப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. அத்துடன் திற்பரப்பு சுற்றுலா மையத்தை நம்பி வாழ்வாதாரம் பெற்று வந்த வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். இதனால் திற்பரப்பு அருவியை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தொடர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், கன்னியாகுமரி சூழலியல் பூங்கா, கன்னியாகுமரி கடற்கரை பகுதி, மற்றும் மாநகராட்சி, நகராட்சி பூங்காக்களை இன்று முதல் திறந்து சமூக இடைவெளியுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்படி திற்பரப்பு அருவியில் இன்று சுற்றுலா பயணிகள் காலையில் இருந்து அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் வரிசையில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 15 பேர் வரை அருவியில் குளித்து விட்டு வந்த பின்னர் மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அருவி நுழைவு வாயிலில் கிருமி நாசினி, மற்றும் கரோனா கட்டுப்பாடு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டனர். 9 மாதங்களுக்குப் பின்னர் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள குளித்து மகிழ்ந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
கரோனா ஊரடங்கால் வெறிச்சோடி இருந்த திற்பரப்பு அருவி சுற்றுலாப் பயணிகள் வருகையால் இன்று களைகட்டியிருந்தது. வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைப்போல் மார்த்தூர் தொட்டிப்பாலம், பிற சுற்றுலா மையங்களிலும் இன்று சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT