Last Updated : 15 Dec, 2020 04:06 PM

 

Published : 15 Dec 2020 04:06 PM
Last Updated : 15 Dec 2020 04:06 PM

திருச்சியில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினர்.

திருச்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 2-வது நாளாக விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகளுடன் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு, மறுபுறம் விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்துவிட்டதாக திசை திருப்புவதாகக் கூறிய மத்திய அரசைக் கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டிச.14, 15, 16 ஆகிய 3 நாட்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, 2-வது நாளான இன்று (டிச.15) விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவ.சூரியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் அருகே காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் அதிகாரம், மனிதநேய ஜனநாயக கட்சி, மக்கள் கலை இலக்கிய கழகம் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 200 பேர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நேரிட்டது. தொடர்ந்து, காவல் துறையினர் ஒலிபெருக்கி பயன்படுத்துவதைத் தடுக்காமல் விலகினர். இதையடுத்து, காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x