Published : 15 Dec 2020 01:00 PM
Last Updated : 15 Dec 2020 01:00 PM
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் புதிதாகக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. எப்போது கட்சி தொடக்கம் என்ற அறிவிப்பை டிசம்பர் 31-ம் தேதி வெளியிடவுள்ளார் ரஜினி. தற்போது 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த், கட்சி அறிவிப்புப் பணிகளுக்காக டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்புகிறார்.
தான் தொடங்கவுள்ள புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்துள்ளார் ரஜினிகாந்த். அவர்கள் இருவருமே கட்சிப் பணிகளை மும்முரமாகக் கவனித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ரஜினி தொடங்கவுள்ள கட்சியின் பெயர் 'மக்கள் சேவை கட்சி' எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் நேற்று (டிசம்பர் 14) தமிழகத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் குறித்த அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ரஜினியின் திட்டம்
2017-ம் ஆண்டு தான் அரசியலுக்கு வரவுள்ளதை உறுதி செய்தார் ரஜினி. அப்போதே கட்சியின் பெயர் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்தார். அப்போது பதிவு செய்யப்பட்ட கட்சியின் பெயர் 'அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்'. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டது. அப்போது நடைபெற்று வந்த ஆட்சி கலைந்தால், உடனே கட்சி தொடங்கி, தேர்தலைச் சந்திக்க வேண்டும் என முடிவு செய்து பணிகளைத் துரிதப்படுத்தினார் ரஜினி.
ஆனால், ரஜினி நினைத்தது நடக்கவில்லை. அதிமுகவில் நடைபெற்ற கோஷ்டிப் பூசல் சரியாகி, தற்போது வரை ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்பதை முடிவு செய்துவிட்டார் ரஜினி. முன்னதாக, தனது முதல் தேர்தல் களம் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலாகத்தான் இருக்க வேண்டும் என்பதையும் ரஜினி எப்போதோ முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
மாற்றப்பட்ட கட்சியின் பெயர்
'அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்' என்ற பெயரை சில மாதங்களுக்கு முன்பு தான் 'மக்கள் சேவை கட்சி' என மாற்றியுள்ளனர். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்னவென்றால், சமீபத்தில் வெளியான ஒரு படத்தில், 'மக்கள் சக்தி கழகம்' என்ற பெயரில் சில அரசியல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனாலேயே இந்தப் பெயரை மாற்றியுள்ளனர்.
தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட ஏதுவாக சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்தக் கோரிக்கையில் 'பாபா முத்திரை' சின்னமிருந்தால் ஒதுக்குமாறும், அது இல்லை என்றால் ஆட்டோ சின்னத்தை ஒதுக்குமாறும் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த விண்ணப்பத்தில் ரஜினிகாந்த் பெயர் இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான சின்னங்கள் ஒதுக்கீடு பட்டியலில் 'மக்கள் சேவை கட்சி'க்காக ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
பாபா சின்னம் ஒதுக்கப்படாததன் பின்னணி
'பாபா முத்திரை' சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து விசாரித்த போது, தேர்தல் ஆணையத்தில் சின்னம் ஒதுக்குவது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. அப்போது பாபா முத்திரை சின்னம் ஒதுக்கினால், காங்கிரஸ் கட்சியினரின் தங்களுடைய கை சின்னத்துக்கு சிக்கலாகும் என்று பிரச்சினை எழுப்பலாம் எனக் கருதியுள்ளது தேர்தல் ஆணையம். இதனாலேயே பாபா சின்னத்தை ஒதுக்காமல், ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளனர்.
ரஜினி ரசிகர்களோ ஆட்டோ சின்னத்தால் சந்தோஷமடைந்துள்ளனர். ஏனென்றால், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படங்களில் முக்கியமான படம் 'பாட்ஷா'. அதில் ஆட்டோகாரராக நடித்திருந்தார் ரஜினி. இதனால், கண்டிப்பாக நமக்கு வெற்றிதான் என்று குஷியாகியுள்ளனர்.
அமைதி காக்கும் ரஜினி தரப்பு
தற்போது 'மக்கள் சேவை கட்சி', ஆட்டோ சின்னம் என்ற தகவல் எல்லாம் வெளியானாலும், ரஜினி தரப்போ அமைதி காத்து வருகிறது. டிசம்பர் 31-ம் தேதி அனைத்துமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT