Published : 15 Dec 2020 12:51 PM
Last Updated : 15 Dec 2020 12:51 PM

தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அத்துமீறல்: வைகோ கண்டனம்

சென்னை

கடந்த ஐந்து ஆண்டுகளாக, படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், கடந்த நவம்பர் மாதம் இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டன. அதன் பின்னரும் அவற்றை மீட்பதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

''இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களைக் கைது செய்வதும் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. இவ்வாறு எல்லை தாண்டி வந்து இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்த 121 படகுகள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுக் கிடக்கின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், கடந்த நவம்பர் மாதம் இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டன. அதன் பின்னரும் அவற்றை மீட்பதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை முற்றிலும் தடை செய்யும் நோக்கத்துடன், இலங்கை அரசு இலங்கை கடற்தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இதன்படி, எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் மீனவர்கள் கைது செய்யப்பட்டு, ரூபாய் 60 லட்சம் முதல் 1.75 கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் அபராதம் விதிக்கவும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கின்றது.

இலங்கை அரசின் இச்சட்டம் தமிழக மீனவர்கள் மீது அடக்குமுறையை ஏவி ஒடுக்குவதற்காகவே கொண்டு வரப்பட்டதை, பிரதமர் நரேந்திர மோடியை 2016, டிசம்பர் 15-ம் தேதி நாடாளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலத்தில் நேரில் சந்தித்து எடுத்துரைத்தேன். பாக் நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் குறிவைத்து, இலங்கை அரசு இக்கொடிய சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது என்று சுட்டிக்காட்டினேன்.

அதன் பின்னர், 2017 மே 11-ல் இலங்கையில் நடந்த விசாக நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றபோது, அந்நாட்டு அரசிடம் இலங்கைக் கடற் தொழில் சட்டம் குறித்து மீனவர்களின் கவலையை இலங்கை அரசிடம் பிரதமர் தெரிவிக்கவில்லை. இந்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தால். மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் இந்திய எல்லையிலேயே கைது செய்யப்படுவதும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கின்றன.

இந்நிலையில், ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஐந்து விசைப்படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நேற்று முன்தினம் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அரசின் இந்நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாகச் செயல்பட்டு, தமிழக மீனவர்களை விடுவிக்கவும், படகுகளை மீட்கவும் முன்வர வேண்டும் என வலியுறுத்துகின்றேன்''.

இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x