Published : 15 Dec 2020 10:40 AM
Last Updated : 15 Dec 2020 10:40 AM
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து ஆலங்குடி மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் இடதுசாரி கட்சியினர் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக தலா 3 தொகுதிகளை கைப்பற்றின.
வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய தொகுதிகளையும் திமுக கூட்டணியில் இருந்து ஒதுக்கி பெறுமாறு கட்சியின் தலைமைக்கு அக்கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஆலங்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளையும் திமுக கூட்டணியில் இருந்து ஒதுக்கி பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு புதுக்கோட்டை மாவட்டக் குழுவில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு தொகுதிகளிலும் இடதுசாரிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், "தொகுதி மறுசீரமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட கந்தர்வக்கோட்டை தொகுதியில் இதுவரை நடைபெற்ற 2 தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.சின்னத்துரை, மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் யாரும் வாங்காத அளவுக்கு அதிக வாக்குகள் பெற்றார்.
இத்தொகுதி தனி தொகுதியாகவும் இருப்பதாலும், கட்சியிலும் ஆதிதிராவிட மக்களே பலமாக இருப்பதாலும் திமுக கூட்டணியில் இருந்து இத்தொகுதியை ஒதுக்கீடு செய்தால், மீண்டும் எம்.சின்னத்துரையை நிறுத்தி கண்டிப்பாக வெற்றி பெறுவோம். தேர்தல் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருப்பதால் இந்த தொகுதியை பெற வேண்டும் என்றும், கூடுதலாக அறந்தாங்கி தொகுதியையும் கேட்டு மாவட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என்றனர்.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், "ஆலங்குடி தொகுதியில் கடந்த 2006-ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. அதற்கு முந்தைய தேர்தலில் அதிமுகவிடம் இருந்து 652 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே, இந்த தொகுதியையும், அதிமுக கூட்டணியில் 2011-ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுக்கோட்டை தொகுதியையும் ஒதுக்கி பெறுமாறு கட்சியின் தலைமைக்கு தெரிவித்துள்ளோம். அங்கிருந்து பரிந்துரை பட்டியல் கேட்டவுடன் இவ்விரு தொகுதிகளையும் கேட்டு தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப உள்ளோம்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT