Published : 20 Jun 2014 12:34 PM
Last Updated : 20 Jun 2014 12:34 PM

இந்தியை கட்டாயப்படுத்தாதீர்: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சமூக வலைத்தளங்களில் மத்திய அரசின் தகவல்களை இந்தி மொழியில் வெளியிடுவதை கட்டாயமாக்கியுள்ள உள்துறை அமைச்சகத்தின் முடிவை கைவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு வெள்ளிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 10 மற்றும் மே 27 ஆகிய இரு நாட்களில் மத்திய உள்துறை அமைச்சகம் இரு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அதில் ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக்ஸ் (வலைப்பூக்கள்), கூகுள் மற்றும் யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசு தொடர்பான தகவல்களை வெளியிடும்போது ஆங்கிலத்துடன் இந்தியையும் பயன்படுத்த வேண்டும். இந்தியை முதலிலும், அதற்கு கீழே ஆங்கில மொழியாக்கத்தையும் வெளியிடவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியை கட்டாயமாக்கியும் ஆங்கிலத்தை விருப்பமிருந்தால் மட்டும் வெளியிடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி மொழிகள் விதிகள் 1976 ன் படி, மாநில அரசுக்கோ அல்லது யூனியன் பிரதே சத்துக்கோ மத்திய அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில்தான் எழுதப்பட வேண்டும் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். ஆட்சி மொழிகள் சட்டம் 1963 பிரிவு 3 (1) ல், 1968 ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு திருத்தத்தின் மூலம் இந்த விதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரு அறிவிக்கைகள், இந்தி மொழி பேசப்படும் மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவ லகங்களில் இதை பின்பற்றப்பட வேண்டும் என்றும், சமூக வலைத் தளங்களில் தகவல் களை வெளியிடும்போதும் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட் டுள்ளது.

இருப்பினும், சமூக வலைத்தளங்களை இயல்பிலேயே அனைத்து பகுதி மக்களால் பார்க்க முடியும் என்பதுடன், இந்தியா முழுவதிலும் மக்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் ஒரு தளமாகவும் அவை விளங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டிய, இந்தியை ஆட்சி மொழியாகக் கொண்டிருக்காத ‘சி’ பிராந்திய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ‘ஏ’ பிராந்தியத்தில் வெளியிடப் படும் அரசின் தகவல்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும். மத்திய உள்துறையின் புதிய நடவடிக்கை அலுவலக ஆட்சி மொழிகள் சட்டம் 1963-க்கு எதிராக உள்ளது.

இது, தங்களது மொழியின் தொன்மை மற்றும் பாரம் பரியத்தை மிகப் பெருமையாகக் கருதும் தமிழக மக்களிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் செம்மொழியாம் தமிழ்மொழியின் பாரம்பரியச் சிறப்பினை மிகவும் பெருமையாக கருதுபவர்கள். இது ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாகும். எனவே, அந்த அறிவிக்கைகளில் மக்களின் உணர்வுகளுக்கேற்ப உரிய மாற்றங்களை செய்ய தாங்கள் தகுந்த அறிவுரையை வழங்க வேண்டும்.

மேலும், கடந்த 3-ம் தேதி உங்களைச் சந்தித்தபோது கொடுத்த மனுவில், தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். மேலும், பட்டியல் 8-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் நாட்டின் ஆட்சி மொழியாக்கி, இந்திய அரசிய லமைப்பு சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்பட்சத்தில், சமூக வலைத்தளங்களில் அனைத்து ஆட்சி மொழிகளையும் பயன்படுத்துவதை ஊக்குவிக் கலாம். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x