Published : 15 Dec 2020 03:14 AM
Last Updated : 15 Dec 2020 03:14 AM
திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் நேற்று காலை பணம் இல்லாததால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தனர்.
தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டமான திருப்பூரில், பின்ன லாடை உற்பத்தி பிரதானமாக நடைபெற்று வருகிறது. மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி, தற்போது மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பின்னலாடை உற்பத்தி நடைபெற்று வருகிறது. பின்னலாடை தொழிலாளர்களை பொறுத்தவரை, அனைவருக்கும் வாரந்தோறும் என்ற அடிப்படையில் சம்பளம் அளிக்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கு பழைய நடைமுறையை கைவிட்டு, தற்போது வங்கிக்கணக்குகளில் நேரடியாக சேர்க்கப்படுகிறது. இதனால், சனிக்கிழமை மாலை அல்லது இரவு வங்கிக் கணக்குகளில் சம்பளம் சேர்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருப்பூர், அனுப்பர்பாளையம், அவிநாசி உள்ளிட்டபகுதிகளில் நேற்று காலை ஏடிஎம்மையங்களில் பணம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காய்கறி, பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், பணம் இல்லாததால், பணம் இருப்பு உள்ள ஏடிஎம் மையங்களை தேடி நீண்ட தொலைவுக்கு அலைய வேண்டியிருந்தது.
இதுகுறித்து அவிநாசியை சேர்ந்த எம்.நந்தகுமார் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறும்போது, "எனது வீடு அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் உள்ளது. அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம், தனியார் வங்கி ஏடிஎம் மையம் தொடங்கி கிழக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரதவீதி உள்ளிட்ட பகுதிகள், சேயூர்சாலை பகுதிகளிலுள்ள ஏடிஎம்மையங்களில் காலை முதலே பணம்இல்லை. பல இடங்களில் தேடிஅலைந்ததில், ஓரிரு ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் கிடைத்தது. அங்கும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
யாரும் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. பணம் எடுக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் செலவிட வேண்டியிருந்தது. அதன்பிறகே அத்தியாவசியப் பொருட்களை வாங்கி செல்ல முடிந்தது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகளவில் பணம் எடுக்கின்றனர். இதனால் ஏடிஎம் மையங்களில் கூடுதல் பணம் நிரப்ப வேண்டும் அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை நேரங்களில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பி வைத்தால் பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.
திருப்பூரை சேர்ந்த ராமசாமி கூறும்போது, "திருப்பூர் - பல்லடம் சாலையில் பல ஏடிஎம் மையங்களில் பணம் கிடைக்கவில்லை" என்றார்.
இதே பிரச்சினையால், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டரிடம் கேட்டபோது, "சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதால், இப்பிரச்சினை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. வங்கியாளர்கள் கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து அறிவுறுத் தப்படும்" என்றார்.
பணம் எடுக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் செலவிட வேண்டியிருந்தது. அதன்பிறகே அத்தியாவ சியப் பொருட்களை வாங்கி செல்ல முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT