Published : 15 Dec 2020 03:15 AM
Last Updated : 15 Dec 2020 03:15 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 83 ‘மினி கிளினிக்’ அமைக்க திட்டமிட்டுள்ள சுகாதாரத் துறை, அதற்காக துணை சுகாதார நிலைய கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.
காஞ்சிபுரம் சுகாதார மாவட்டத்தின்கீழ் கிராமப் பகுதிகளில் 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 166 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இதேபோல், செங்கல்பட்டு சுகாதார மாவட்டத்தில் 48 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ளன. இந்த துணை சுகாதார நிலைய கட்டிடங்களில் பெரும்பாலான கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமல் பாழடைந்துள்ளன.
இதனால், கிராமப்பகுதி மக்கள் மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தொலைதூரத்தில் உள்ளநகரப்பகுதி அரசு மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில், கிராமப் பகுதிகளில் எளிதாக மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் ‘மினி கிளினிக்’ திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 41 மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 42 மினி கிளினிக்குகள் அமைய உள்ளன.
இந்த மினி கிளினிக் திட்டத்துக்காக துணை சுகாதார நிலைய கட்டிடங்களை பயன்படுத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, துணை சுகாதார நிலைய கட்டிடங்களை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, காஞ்சி மற்றும்செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, "குக்கிராமங்களில் மக்கள் தொகை அடிப்படையில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது. இவற்றில், கிராம மக்களுக்கு எளிதாக மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் காலை, மாலையில் சிகிச்சை அளிக்கப்படும். மினிகிளினிக் என்றாலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, காய்ச்சல், மகப்பேறுசிகிச்சை மற்றும் ஆலோசனைகள்என அனைத்தும் இங்கும் வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளன" என்றனர்.
கிராம மக்கள் இதுகுறித்து கூறும்போது, "மினி கிளினிக் மூலம் கிராமங்களில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், துணை சுகாதார நிலையம் போன்று மினி கிளினிக் திட்டம் முடங்கிவிடாத வகையில் அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT