Last Updated : 07 Oct, 2015 07:45 AM

 

Published : 07 Oct 2015 07:45 AM
Last Updated : 07 Oct 2015 07:45 AM

சிறைவாசிகளுக்கான அரசு ஐ.டி.ஐ.யில் சேர தகுதியானவர்கள் விவரம் 9 மத்திய சிறைகளில் சேகரிப்பு: உடனடியாக பட்டியல் தாக்கல் செய்ய ஏடிஜிபி உத்தரவு

சிறைவாசிகளுக்கான அரசு ஐ.டி.ஐ.யில் சேர திருச்சியில் தகுதியுடையவர்கள் போதுமான அளவுக்கு இல்லாததால், தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் இருந்தும் சிறைவாசிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தண்டனை பெற்று சிறையில் உள்ளோரின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழிற்பயிற்சிகளை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மாநிலத்திலேயே முதல்முறையாக திருச்சி மத்திய சிறையில் அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் ஐ.டி.ஐ. தொடங்கப்படுகிறது. இதற்கான உள்கட்டமைப்பு பணிகள் அங்கு விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடப்பு கல்வியாண்டில் பிட்டர் 21, கணினி ஆபரேட்டர் 52, எலெக்ட்ரீஷியன் 21, டெய்லரிங் 42, வெல்டர் 32 என மொத்தம் 168 கைதிகள் ஐ.டி.ஐ.யில் சேர்த்து கொள்ளப்பட உள்ளனர். 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சிறைவாசிகளுக்கு சேர்க்கை அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் முதல் வாரத்துக்குள் சேர்க்கையை முடித்து, உடனடியாக பயிற்சி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக திருச்சி மத்திய சிறையில் உள்ள தகுதியுடைய சிறைவாசிகளின் பட்டியலை தயாரிக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. 109 பேரை சேர்த்துக்கொள்ளலாம் என சிறை நிர்வாகம் பரிந்துரைத்தது. அதில், 73 பேர் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். கல்வித்தகுதி, வயது வரம்பு, அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல காரணங்களால் பயிற்சிக்கான 168 இடங்களையும் நிரப்ப முடியவில்லை. எனவே, இதுபற்றி சிறைத் துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அதில், திருச்சி தவிர மற்ற மத்திய சிறைகளில் தகுதியுடைய சிறைவாசிகள் இருந்தால், அவர்களை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்றி, அரசு ஐ.டி.ஐ.யில் சேர்த்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து புழல்-1, புழல்-2, திருச்சி, மதுரை, கோவை, சேலம், பாளையங்கோட்டை, வேலூர், கடலூர் ஆகிய 9 மத்திய சிறைகளில் உள்ள தகுதியுடைய மற்றும் ஐ.டி.ஐ.யில் சேர்ந்து பயில விருப்பமுடைய சிறைவாசிகளின் விவரத்தைச் சேகரித்து, உடனடியாக அனுப்பி வைக்குமாறு சிறைத் துறை இயக்குநரும், ஏடிஜிபியுமான திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அதற்கான பணிகள் தற்போது 9 மத்திய சிறைகளிலும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஆ.முருகேசனிடம் கேட்டபோது, “சிறைவாசிகளுக்கான அரசு ஐ.டி.ஐ.யில் சேர 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும். பள்ளிக்குச் சென்றுதான் 8, 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் உள்ளன. இதற்குட்பட்ட நபர்களை திருச்சி சிறைக்குள் உடனடியாக தேர்வு செய்ய முடியவில்லை. எனவே பிற சிறைகளில் இருக்கும் தகுதியான நபர்களுக்கும் சேர்க்கை அனுமதி அளிக்கப்பட உள்ளது. ஏடிஜிபி உத்தரவின்பேரில் இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஒரு வாரத்துக்குள் மாணவர் சேர்க்கை பணிகள் முடிவுறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x