Published : 14 Dec 2020 11:38 PM
Last Updated : 14 Dec 2020 11:38 PM
எங்களுக்கு டார்ச்லைட் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது; நாங்கள் கலங்கரை விளக்கத்தைப் பெறுவோம் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் திண்டுக்கல்லில் பேசியுள்ளார்.
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தை 2-வது நாளாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டுள்ளார்.
மதுரையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று 14.12.20 இரவு திண்டுக்கல்லுக்கு வருகைதந்த கமல்ஹாசன் ஆர் எம் காலனியில் கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்து கையசைத்தார்.
பின்னர் தனியார் கல்யாண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சுதந்திரமும் ஜனநாயகமும் அன்றாடம் காவல் காக்கப்பட வேண்டிய ஒன்று. நமது உடல் ஆரோக்கியத்தைப் போல அன்றாடம் அதுவும் கவனிக்கப்பட வேண்டும்.
இன்று இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அதனால் தான் எங்களது கட்சியில் அதிகமான மருத்துவர்கள் உள்ளனர்.
எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் போடும் ஊசி வித்தியாசமாக இருக்கும். நான் போடும் ஊசி நல்லவர்களுக்கு வலிக்காது கயவர்களுக்கு வலிக்கும்.
மக்கள் நினைத்தால் கத்தியின்றி ரத்தமின்றி பெரும் புரட்சியை உருவாக்க முடியும். அதற்கு நூல் முனையாக நான் இருக்கின்றேன் நீங்கள் இயக்கும் கருவியாக நான் இருக்க முயல்கின்றேன். அரங்கம் முழுவதும் தலைகளைப் பார்க்கவில்லை. தலைவர்களைப் பார்க்கின்றேன்.
நமக்கு டார்ச்லைட் சின்னம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது. டார்ச்லைட் சின்னம் இல்லை என்றால் கலங்கரை விளக்கத்தை நாங்கள் வாங்குவோம். சாதாரண ரூபத்தை விஸ்வரூபமாக மாற்றுவது இவர்கள்தான். நீங்கள் சொல்லுங்கள் எப்பொழுது விஸ்வரூபம் எடுக்க வேண்டும் என்று. உடனடியாக எடுத்து விடுவோம்.
எங்களுக்குப் போட்டி ஜனநாயகத்தின் எதிரிகளோடு தான். ஒருவருக்கு ஒருவர் அல்ல. உங்களுக்குள் இடையே உள்ள போட்டி ஆரோக்கியமாக இருந்தால் கட்சி ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்குள் இருக்கக்கூடிய போட்டி அநாகரிகமாக பொறாமையாக இருந்தால் அது கட்சிக்கு பலவீனமாக அமையும்.
வரும் தேர்தலில் வெற்றிக்கான பாதை கண்முன் தெரிகிறது. ஏழை மக்களிடம் காசை காட்டினால் ஆசை வரத்தான் செய்யும். ஏழைகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். கொள்ளைக்காரர்கள் ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கிறார்கள். அதை அவர்களது பாக்கெட்டில் இருந்து கொடுப்பது இல்லை. உங்களது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறார்கள். உங்களை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள். 5 லட்சம் 50 லட்சம் என பேரம் பேச வேண்டிய நீங்கள் 5,000 ரூபாய்க்கு விற்றுவிட்டு வந்து நிற்கிறீர்கள். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள் வாக்கை விற்க மாட்டீர்கள்.
எங்களது கட்சிக்கு நேர்மை மட்டும்தான் உத்தி. தேர்தல் என்றால் நேர்மை மட்டும் தான். கூடவே கொஞ்சம் தைரியம் வேண்டும் எங்களைப் பொறுத்தவரை நேர்மையும் தைரியமும் இரட்டை மாட்டு வண்டி. அந்த இரண்டும் இல்லை என்றால் வண்டி ஓடாது. போட்டிகள் எல்லாம் நமக்கு கயவர்களுடன் தான்.
இவ்வாறு அவர் பேசினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT