Last Updated : 12 Oct, 2015 09:31 AM

 

Published : 12 Oct 2015 09:31 AM
Last Updated : 12 Oct 2015 09:31 AM

மதவாதத்தை தூண்டும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்: மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கருத்து

மதவாதத்தை தூண்டுகிற அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும், ‘ஸ்வராஜ் அபியான்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான பிரசாந்த் பூஷண் கூறினார்.

சென்னை தரமணியில் உள்ள ஆசியன் இதழியல் கல்லூரியில் மாணவர்களிடம் உரையாற்றுவதற்காக பிரசாந்த் பூஷண் நேற்று சென்னை வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

ஆம் ஆத்மியில் இருந்து வெளி யேற்றப்பட்டதுமே ‘ஸ்வராஜ் அபியான்’ அமைப்பை தொடங்கினீர்கள். உங்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் ஆம் ஆத்மியிலிருந்து எப்படி வேறுபடப் போகின்றன?

மக்கள் பிரச்சினைகளுக்காக பிரச்சாரங்களை மேற்கொள்ளவும் போராட்டங்களை நடத்தவும் உருவாக்கப்பட்டதுதான் ‘ஸ்வராஜ் அபியான்’. ஆம் ஆத்மி மீது அதிருப்தியில் உள்ளவர்களும், உண்மையாகவே மாற்றத்தை விரும்புவோரும் எங்கள் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். தேர்தல் அரசியலில் பங்கெடுக்கிற எண்ணம் இப்போது இல்லை.

அரசியல் அதிகாரம் இல்லாமல் பிரச்சாரங்களின் மூலம் மட்டுமே மாற்றத்தை கொண்டுவர முடியுமா?

உறுப்பினர்களின் பின்புலத்தை ஆய்வு செய்யாததுதான் ஆம் ஆத்மி செய்த மிகப்பெரிய தவறாகும். எங்கள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களிடம் வெளிப் படைத்தன்மை, பொறுப்புடைமை, ஜனநாயகம் ஆகிய 3 கூறுகளின் மீது நம்பிக்கையும் பிடிமானமும் உள்ளது என்பதை உறுதி செய்த பிறகே நாங்கள் அரசியல் கட்சியாக உருவெடுப்போம். அதுவரை இயக்கமாக தொடருவோம்.

அரவிந்த் கேஜ்ரிவால், கொள்கையை விட்டு விலகியதாக கூறுகிறீர்கள். ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தானே செய்கிறார்?

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதவியை இழந்துள்ள ஆசீம் கான், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்புதான் ஆம் ஆத்மியில் இணைந்தார். அவர் அமைச்சராக்கப்பட்டார். சட்ட அமைச்சராக இருந்த ஜிதேந்திர தோமர் மீதான போலி பட்டம் குறித்த குற்றச்சாட்டும், டெல்லி தேர்தலுக்கு முன்பாகவே எழுந்தது. அவர்களுக்கு பதவிகளை கொடுத்ததன் மூலம், மாற்று அரசியலை பேசுகிறவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாத வண்ணம் கேஜ்ரிவால் செய்துவிட்டார்.

டெல்லி, பஞ்சாப் தவிர பிற மாநிலங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற முடியவில்லை. நீங்கள் மாநிலங்களை எப்படி வசப்படுத்தப் போகிறீர்கள்?

எங்களுக்கு வசப்படுத்த வேண்டிய தேவை இல்லை. ஆனால், எங்களின் மாநிலக் குழுக்கள் மூலம் அந்த மாநில மக்களின் பிரச்சினைகளை கேட்டறிவோம். உதாரணத்துக்கு தமிழகத்தில் மது விலக்கு தேவை உள்ளது. இதுபோல ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிரச்சினைகளை முன்வைத்து போராடுவோம்.

3 ஆண்டு சட்டப்படிப்பு தேவையில்லை என்றும் குற்றப்பின்னணி உள்ளவர்கள் வழக்கறிஞர்கள் ஆவதை தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த பரிந்துரையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

3 ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்யச் சொல்வது சரியானது இல்லை. ஆனால், நீதித்துறையை பாழ்படுத்தும் குற்றப்பின்னணி உள்ள வழக்கறிஞர்களை அனுமதிக்கக் கூடாது. ஒருவர் வழக்கறிஞராக பதிவு செய்ய வரும்போது அவர் குற்றப்பின்னணி உள்ளவரா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக சுதந்திரமான நபர்களையோ, அமைப்பையோ ஏற்படுத்த வேண்டும்.

தேர்தல் முறையில் நிறைய சீர்திருத்தங்கள் தேவை என்று வலியுறுத்துகிறீர்களே?

இன்றைய சூழலுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும். மதவாதத்தை தூண்டுகிற அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிற அரசியல் கட்சிகள் மீதும் நடவடிக்கை அவசியம். முக்கியமாக மாநில தேர்தல் ஆணையங்கள் அம்மாநில அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x