Published : 14 Dec 2020 04:57 PM
Last Updated : 14 Dec 2020 04:57 PM
நவீன உலகுக்கான உற்பத்தி மையமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (டிச. 14) நடைபெற்ற தொழில் வளர் தமிழ்நாடு வளர்ச்சி மற்றும் முதலீடு சிறப்பு அமர்வில், புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல், புதிய திட்டங்களில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:
"தமிழக அரசின் சிறப்பான செயல்பாடுகளால், துறைகள்தோறும் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
நவீன உலகுக்கான புதிய சிந்தனைகள், சீரிய செயல்திறன், தொடர் செயல்பாடுகள், நிலைத்தன்மை ஆகிய நான்கும் அரசின் செயல்பாடுகளின் அடித்தளமாக விளங்குகின்றன.
தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லவும், மேலும் பல உயரங்களைத் தொடவும், முழு முனைப்போடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
நாளை வருவதை இன்றே கணித்து, அதற்கேற்ற முறையான திட்டமிடலுடன் செயல்பட்டு, வளமான வருங்காலத்தை உருவாக்கிடும் மக்களின் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், முழுமையாக களத்தில் இறங்கி, மக்களுடன் இணைந்து, பல்வேறு தொடர் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டது. மக்கள் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சி என இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்து, மிகுந்த கவனத்துடன் படிப்படியான தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அரசின் இத்தகைய செயல்பாடுகளால், இன்று நோய் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொருளாதார மறுசீரமைப்பிலும் சிறப்பான முன்னேற்றத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. அதனால்தான் பிரதமர் கரோனா தடுப்பு ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் நாட்டுக்கே முன்னுதாரணமாக தமிழ்நாடு விளங்குகின்றது என்று பாராட்டிப் பேசினார்.
கரோனா பாதித்த அனைவருக்கும் தரமான சிறந்த மருத்துவம், பெரும் மழை, புயல்கள் என தொடர் பேரிடர்களை சிறப்பாகக் கையாண்டு மக்களின் நலனைக் காத்து வரும் நிர்வாகத் திறன், கரோனா தொற்றுக் காலத்தில்கூட இந்தியாவிலேயே அதிக அளவில் புதிய முதலீடுகள், ஜிஎஸ்டி வரி வசூலில் ஏற்பட்டுள்ள தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி என தமிழ்நாடு அரசு செய்து வரும் சாதனைகள் இன்றைக்கு இந்தியாவே உற்று நோக்கிப் பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல், பாராட்டும்படியான வளர்ச்சிக்கான முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கின்றது.
முன்னணி மதிப்பீடுகளில் ஒன்றான CARE மதிப்பீட்டின்படி, 2020-21 நிதியாண்டின் முதல் அரையாண்டில், இந்தியாவிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
இந்திய அரசு வெளியிட்ட 'நல் ஆளுமைக் குறியீட்டில்', இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
'இந்தியா டுடே' பத்திரிகையினால், ஒட்டுமொத்த செயல்பாடுகளில் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலனையும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியையுமே முதன்மை நோக்கங்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் எனது அரசின் பணிகளுக்குக் கட்டியம் கூறுவதுபோல் இந்த மதிப்பீடுகள் அமைந்துள்ளன.
மின்னாளுமை கொள்கை, தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்புக் கொள்கை, தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை, தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை, தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் கொள்கை, தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு முதலீட்டாளர்களுக்கு தெளிவான உறுதிகளை வழங்கி முதலீட்டுக்கு வழிவகுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2015-ன் போது, 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில், ஐந்தே ஆண்டுகளில் 72 சதவீத திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், 73 ஆயிரத்து 711 கோடி ரூபாய் முதலீடுகளும், 1 லட்சத்து 86 ஆயிரத்து 838 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருக்கிறபோது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ஒரு சாதனையை அவர் தமிழகத்தில் ஏற்படுத்தினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ன் போது 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில் 10.50 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில், 24 ஆயிரத்து 492 கோடி ரூபாய் முதலீட்டில், 1 லட்சத்து 10 ஆயிரத்து 844 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளித்துள்ள 81 திட்டங்கள், அதாவது 27 சதவீதத் திட்டங்கள், ஒரே ஆண்டில், தமது வணிக உற்பத்தியை தொடங்கி சாதனை படைத்துள்ளன. ஹுண்டாய் விரிவாக்கம், ஃபாக்ஸ்கான், சால்காம்ப், டாடா கன்சல்டன்சி சர்விசஸ், மேண்டோ, ஹானன், டி.பி.ஐ காம்போசிட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இதில் குறிப்பிடத்தக்கவை. மேலும், 2.20 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 5.33 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதியளித்துள்ள 191 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 வெற்றியை தொடர்ந்து, கடந்த 22 மாதங்களில் மட்டும், 60 ஆயிரத்து 905 கோடி ரூபாய் முதலீட்டில் மற்றும் 1 லட்சத்து 60 ஆயிரத்து 349 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் 120 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றில், முதலீடுகளை ஈர்க்க அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்ற போது 8,835 கோடி ரூபாய் முதலீட்டில் 35 ஆயிரத்து 520 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இவற்றில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 5 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளன.
நடப்பாண்டில் மட்டும், 40 ஆயிரத்து 719 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 74 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு அரசால் கையெழுத்திடப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தத் திட்டங்கள் தவிர்த்து, டி.எல்.எஃப் நிறுவனத்தின் 5,000 கோடி ரூபாய் முதலீட்டிலான தகவல் தொழில்நுட்ப பூங்கா திட்டம், 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் அசன்டாஸ் ரேடியல் ஐ.டி.பார்க் திட்டம், 250 கோடி ரூபாய் முதலீட்டில் பட்டாபிராம் டைடல் பார்க் திட்டம், 250 கோடி ரூபாய் முதலீட்டில் ஸ்ரீபெரும்புதூர் வானூர்தி பூங்காவில் நவீன AEROHUB திட்டம் என பல திட்டங்களுக்கும் இக்காலகட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
எனது தலைமையிலான உயர்நிலைக் குழு, ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி, 39 ஆயிரத்து 941 கோடி ரூபாய் முதலீட்டிலான 62 பெரும் தொழில் திட்டங்களை, நானே நேரடியாக ஆய்வு செய்ததன் பயனாக, உடனுக்குடன் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சிறப்பான நிர்வாகத் திறனுக்கு மற்றொரு சான்றாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. கரோனா காரணமாக சர்வதேச போக்குவரத்து முடங்கியுள்ள சூழலில், தொழில் முதலீடுகள் தடையின்றி நடைபெற அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்கள், சிப்காட் தொழிற் பூங்காக்களில் உள்ள நிலங்களை, இருக்கும் இடத்திலிருந்தே இணைய வழியில், முப்பரிமாண அமைப்பில் பார்வையிடும் சிறப்பான வசதி, இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், நிலத்தின் தன்மை, சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் விரிவாக ஆய்வு செய்து, நிலத்திற்கான விண்ணப்பத்தையும் இணைய வழியிலேயே அனுப்பிட இயலும்.
இன்று மேலும் ஒரு சிறப்பு நிகழ்வாக, FOXCONN நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 'உலகத்தர குடியிருப்பு' வசதியை குறைந்த விலையில் உருவாக்கும் வகையில் SIPCOT நிறுவனத்திற்கும் FOXCONN நிறுவனத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் உள்ளதைப்போல ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு, பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன தங்குமிடங்கள் வழங்கப்படுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரமும், சேமிப்பும் உயரும். 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்ற எனது அரசின் முதன்மையான நோக்கத்திற்கு இதுபோன்ற திட்டங்களே சான்றாக அமைகின்றன.
இன்று, வளர்ந்து வரும் துறைகளான மின்சார வாகன உற்பத்தி, சூரிய மின் உற்பத்தி தளவாடங்கள் தயாரித்தல், மின்னணு பொருட்கள் உற்பத்தி, மருந்து உற்பத்தி, வானுர்தி பாகங்கள் உற்பத்தி என பல துறைகளைச் சார்ந்த 24 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. மேலும், 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டும், ஒரு திட்டம் தொடங்கப்பட்டும் உள்ளது. இத்திட்டங்களின் மூலம் 24 ஆயிரத்து 458 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 54 ஆயிரத்து 218 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விரும்பி வரும் மாநிலமாக, நவீன உலகுக்கான உற்பத்தி மையமாக தமிழ்நாடு வளர்ந்து வருவதை இன்றைய நிகழ்வில் கண்கூடாக நாம் காணமுடிகிறது. வாகன உற்பத்தி, துணி நூல் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி, பொறியியல் இயந்திரங்கள் உற்பத்தி, காற்றாலை உபகரணங்கள் உற்பத்தி ஆகியவற்றில் உலக அளவில் பெயர்பெற்ற தமிழ்நாடு, தற்போது வளர்ந்துவரும் துறைகளான சூரிய மின்சக்தி தளவாடங்கள் மற்றும் மின்சார வாகன உற்பத்தி ஆகியவற்றுக்கான புதிய மையமாக உருவாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்க நாட்டின் First Solar நிறுவனம் மேற்கொள்ளும் 4,185 கோடி ரூபாய் முதலீடு, ஓசூரில் மின் இருசக்கர வாகனம் உற்பத்தியில் Ola Electric நிறுவனம் மேற்கொள்ளும் 2,354 கோடி ரூபாய் முதலீடு, Crown குழுமத்தின் வானூர்தி பாகங்கள் உற்பத்தியில் மேற்கொள்ளும் 2,500 கோடி ரூபாய் முதலீடு ஆகியன இதையே உணர்த்துகின்றன. இது தவிர, Mylon Pharma உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மருந்து உற்பத்தித் துறையிலும் தமிழ்நாட்டின் சிறப்பான செயல்பாடுகளை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் 'புதிய தொழில் துவங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு' என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தொழில் துறையினரிடம் தொடர்ந்து இருந்து வருவதற்கு மற்றுமொரு சான்றாக இன்றைய சிறப்புமிக்க நிகழ்வு அமைந்துள்ளது".
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT