Published : 14 Dec 2020 04:33 PM
Last Updated : 14 Dec 2020 04:33 PM
விருதுநகர் முதல் கோவை வரை உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த நேதாஜி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
விருதுநகர் முதல் கோவை வரை 765 கேவி டிசி உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தமிழக அரசு 2019-ல் அரசாணை பிறப்பித்தது. இதனால் விருதுநகர் முதல் கோவை வரை பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்படவுள்ளது.
இந்த மின் கோபுரங்கள் மிக அதி மின் சக்தி கொண்டது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும். பறவைகள், கால்நடைகள் வளர்ப்பும் பாதிக்கப்படும். மின் கோபுரம் அருகே வசிக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு உடல் நலக்குறைபாடு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. உயர் அழுத்த மின் கோபுரங்களின் அருகே குடியிருப்புகள் கட்டவோ, குடியிருக்கவோ முடியாது.
எனவே, விருதுநகர் முதல் கோவை வரை உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT