Published : 14 Dec 2020 03:46 PM
Last Updated : 14 Dec 2020 03:46 PM
கல்லூரிகள் திறக்கும்போது தற்போதுள்ள ஐஐடியில் உள்ள நிலைமையை கணக்கில் கொண்டு, ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதலை கடுமையாக கல்லூரியில் கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை அடையாறு ஐஐடியில் 104 மாணவர்கள், மெஸ் ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அங்கு ஆய்வு செய்தப்பின் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
“ ஐஐடி வளாக மெஸ்ஸிலிருந்து தொற்று பரவியிருக்கலாம் என்பதால் அனைத்து மெஸ்ஸையும் மூடிவிட்டோம். மாணவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு உணவைக் கொண்டுச் சென்று கொடுக்கும் நிலை ஏற்படுத்தியுள்ளோம். இதுவரைக்கும் எடுத்த 444 சாம்பிள் 104 பாஸிட்டிவ், இதில் 87 பேர் மாணவர்கள், 16 பேர் மெஸ்ஸில் பணியாற்றுபவர்கள், ஒருவர் 1 அப்பகுதியில் வசிப்பவர்.
66 மாணவர்கள் கிண்டி கிங்க் இன்ஸ்டிடியூட்டில் உள்ளனர். அவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். நான் அடுத்து கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு ஆய்வுக்கு செல்ல உள்ளேன். மீதமுள்ள நபர்களும் இங்கு தனிமையில் உள்ளனர். இங்குள்ள மாணவர்கள் முறையான வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஐஐடி நிர்வாகம் குடியிருப்பு பகுதி வேறுவிதமாக உள்ளது. அவர்களுக்குள்ளேயே ஒரு பாதுகாப்பு வளையம் போட்டு அப்பகுதியை நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதி போல் ஆங்காங்கங்கே கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். தேவையில்லாமல் ஆய்வகத்துக்கு வரவேண்டியில்லை, வீட்டிலிருந்து வேலை எனும் வகையில் இவர்களே அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சுகாதாரத்துறையைப் பொறுத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறைச் செயலாளரான நான், இயக்குனர் பொது சுகாதாரம் ஆகியோர் தொடர்ச்சியாக ஆய்வு மேற்கொண்டுள்ளோம். சாச்சுரேஷன் டெஸ்ட் (Saturation Test) செய்ய உள்ளோம். அதன்படி 100% அந்த ஏரியாவை சோதனை செய்வோம். பரிசோதனையில் இறங்கும்போது அந்தப்பகுதியில் மீதமுள்ளவர்கள் சோதனை செய்யப்படுவார்கள்.
அப்படி சோதனை செய்யும் போது மீதமுள்ள 398 பேரை பரிசோதனை செய்ய உள்ளோம். இன்று 150 பேர் என அனைவரையும் பரிசோதனை செய்து ஐஐடி நிர்வாகத்திற்கு தெளிவான ஒரு தகவலை கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு சிகிச்சை கொடுத்து, மீதமுள்ள நபர்களுக்கு உரிய வழிகாட்டுதல் கொடுப்போம்.
ஆரம்பத்தில் ஒன்றிரண்டு என 9-ம் நாள் தான் முழு அளவில் பெரிதாக வந்துள்ளது. 8-ம் தேதி 4 என வந்ததால் உடனடியாக நாங்கள் செயலில் இறங்கிவிட்டோம். பின்னர் 11, 12 என வந்தது. இதில் பாருங்கள் 444 சாம்பிள் எடுத்துள்ளோம். இது தொடர்ச்சியாக சாச்சுரேஷன் டெஸ்ட் எடுத்ததால் தெரியவருகிறது.
ஐஐடி வளாகத்தில் பாதிப்பு அதிகமாக உள்ள கிருஷ்ணா மற்றும் ஜமுனா பகுதிகளில் எடுத்துள்ளோம். கிருஷ்ணாவில் 25 பாஸிட்டிவ், மீதமுள்ளவர்கள் நெகட்டிவ். ஜமுனாவில் சாச்சுரேஷன் சோதனை முடித்துவிட்டோம். மீதமுள்ள அலக்நந்தா, நர்மதா என மீதமுள்ள பகுதிகளில் பரிசோதனையில் இறங்கியுள்ளோம்.
இதில் நாங்கள் பண்டிகை காலத்தை ஒட்டி வரும் என எதிர்ப்பார்த்தோம். கல்லூரிகளில், ஹாஸ்டல்களில் ஏற்படலாம் என்று நினைத்தோம். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடு பற்றி சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனாலும் ஆகிவிட்டது. வந்துவிட்டது, இதை தொற்று நிபுணர்கள் எங்கிருந்து பரவியது மெஸ் மூலம் பரவியதா?, அல்லது யாராது வெளியில் சென்றுவிட்டு திரும்பி வந்ததன் மூலம் பரவியதா என தனியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.
நாம் இந்த நேரத்தில் பதற்றம் இல்லாமல் இதை கையாளணும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக குறைந்துவரும் நேரத்தில் இதுபோன்று ஒரு இடத்தில் கொத்தாக வருவது எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றுதான். இதை தவிர்க்கணும் என்கிற நோக்கத்தில் தான் முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மாணவர்களிடம் இதை நாங்கள் சொல்கிறோம். மெஸ்ஸில் மிக பாதுகாப்பாக வழிமுறை வைத்துள்ளார்கள், ஆனால் மாணவர்கள் சேர்ந்து உட்கார்ந்து விடுகிறார்கள்.
ஏற்கெனவே கட்டுமானப்பகுதியில் ஒரு பிரச்சினை வந்தபோது இதேப்போன்ற நிலையைத்தான் பார்த்தேன். தனியாக படுப்பார்கள் ஆனால் சேர்ந்துதான் பேசுவார்கள். திருச்சி ஜவுளிக்கடையிலும் இதே நிலைதான் ஏற்பட்டது. எல்லாமே நமக்கு ஒரு பாடம். இது வேண்டுமென்றே நடந்தது இல்லை, இது ஒரு கொள்ளை நோய். அதனால் அதை தவிர்க்க போர்க்கால அடிப்படையில் செய்கிறோம். ஐஐடி நிர்வாகம் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள்.
வெளியிலிருந்து உள்ளேச் செல்பவர்கள் ஐஐடி வளாகத்தில் உள்ள மற்ற குடும்பங்களை சந்திப்பவர்களை சோதிக்க தனிக்குழு போடப்பட்டுள்ளது. கல்லூரிகள் திறக்கும்போது தற்போதுள்ள ஐஐடியில் உள்ள நிலைமையை கணக்கில் கொண்டு, ஏற்கெனவே உள்ள வழிகாட்டுதலை கடுமையாக கல்லூரியில் கடைபிடிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய ஐஐடி இயக்குனர் பாஸ்கர மூர்த்தி சுகாதாரச் செயலர் சொன்ன நடைமுறைகளை கடுமையாக கடைபிடித்தாலும் மாணவர்கள் அதற்கு ஒத்துழைக்காததே இந்த நிலைக்கு காரணம் உரிய வழிமுறைகளை மாணவர்கள் கடைபிடிக்கவேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் கிண்டி கிங்க் இன்ஸ்டிடியூட் சென்று ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT